• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • காவல்துறையில் ரூ.500 முதல் 1 லட்சம் வரைகொடி கட்டி பறக்கும் லஞ்சம்: பகிரங்கமாக அறிக்கை வெளியிட்ட சேலம் எஸ்.பி.

காவல்துறையில் ரூ.500 முதல் 1 லட்சம் வரைகொடி கட்டி பறக்கும் லஞ்சம்: பகிரங்கமாக அறிக்கை வெளியிட்ட சேலம் எஸ்.பி.

லஞ்சம்

லஞ்சம்

சேலம் மாவட்டத்தில், தள்ளுவண்டி முதல் டாஸ்மாக் பார் வரை, 500 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை போலீசார் வசூல் வேட்டை நடத்தி வருவதாக பகிரங்கமாக மாவட்ட எஸ்.பி., அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 • Share this:
  பணம் கொடுத்தால் பிணம் கூட வாயைத் திறக்கும் என்ற பழமொழியை மெய்ப்பித்துள்ளது சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபினவின் சுற்றறிக்கை. ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கு அடுத்த நிலையில் இருக்கும் தமிழக போலீசாரின் பண வசூல் வேட்டை ஒரு மாவட்டத்திலேயே இவ்வளவு என்றால் மற்ற மாவட்டங்களில் எவ்வளவு? உயரதிகாரிகளின் வசூல் எவ்வளவு என்று ஒவ்வொரு குடிமகனையும் யோசிக்க வைத்துள்ளது. எந்தெந்த பிரச்னைகளுக்குப் போலீசார் எவ்வளவு வசூலிக்கின்றனர்? இதோ பட்டியல்

  சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டி.எஸ்.பி. மற்றும் கூடுதல் எஸ்.பி., ஸ்டேஷன்களுக்கு, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களிடம் பணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புகார்தாரர் மற்றும் எதிர்மனுதாரரிடமும் பணம் போலீசார் வசூலிப்பதாக எஸ்பி குற்றம்சாட்டியுள்ளார்.

  இப்படி சட்ட விரோத வசூல் மேற்கொள்வதால், சிறப்பான நிர்வாகத்தை வழங்க இயலாத நிலை ஏற்படும் என்பதால், உடனே அவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நிறுத்தாமல் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி. ஸ்ரீஅபினவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  அவர் வெளியிட்டுள்ள வசூல் பட்டியலில் காவல்நிலைய எழுத்தர், உதவிஆய்வாளர், ஆய்வாளர், சிறப்புப் பிரிவு, ரோந்துப் பிரிவு ஆகிய காவல்துறையினர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளனர். குறைந்த பட்சம் 100 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை போலீசார் வசூல் வேட்டை நடத்துகின்றனர். வசூல் பட்டியலின்படி யார் யார் எவ்வளவு வசூலிக்கின்றனர்?

  பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தடையில்லா சான்று வழங்க, 500 முதல், 1,000 ரூபாய் வரை லஞ்சமாகப் பெறுகிறார் காவல்நிலைய எழுத்தர். பணம் கொடுக்கல் வாங்கல், நிலம் தொடர்பான புகார் மீதான விசாரணைக்கு, 1,000 ரூபாயும், லாட்டரி விற்பனை மற்றும் சூதாட்டத்துக்கு தலா ஆயிரம் ரூபாயும் பெறுகின்றனர்.

  சந்துக்கடைகள் மற்றும் சமூக விரோதிகளை சொந்த ஜாமினில் விட 200 ரூபாயும், வழக்குப்பதிவு ஆவண நகலுக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் காவல் உதவி ஆய்வாளர்களின் வசூல் வேட்டை தலை சுற்ற வைக்கிறது. காவல் ஆய்வாளர்களின் வசூல் வேட்டையோ பலமடங்கு உள்ளது. இப்படி இந்த பட்டியல் நீண்டு செல்கிறது.

  தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இதுவரை இப்படி ஒரு லஞ்சப் பட்டியல் வெளிவந்ததில்லை என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். பட்டியல் வெளியிட்டதோடு நிற்காமல் லஞ்சத்தில் மஞ்சள் குளிக்கும் போலீசார் மீது எஸ்பி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கு காவல்துறை உயரதிகாரிகள் ஆதரவளிக்க வேண்டும். ஆனால் அது நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, 1996ல் சட்டப்பேரவையில், காவல்துறையின் ஈரல் அழுகி விட்டது என வேதனை தெரிவித்தார். அவர் கூறியது இன்று வரை மாறாமல் அப்படியே தான் இருக்கிறது என்கின்றனர் காவலர்கள். இந்த நிலையில் தான், சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

  எஸ்பியின் இந்த சுற்றறிக்கை தற்போது வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Esakki Raja
  First published: