ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

25 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி.. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு - போலீஸார் அதிர்ச்சி

25 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி.. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு - போலீஸார் அதிர்ச்சி

வேணுகோபால்

வேணுகோபால்

தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிப்பட்டி பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர்  லட்சுமணன்.  இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வெங்கட்டன்  என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி லட்சுமணனை,  வெங்கட்டன்  மற்றும் அவருடைய மகன்கள் தனபால், வேணுகோபால் ஆகிய மூவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த  விவசாயி லட்சுமணன்  சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக தீவட்டிப்பட்டி  போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட்டன்  மற்றும் அவருடைய மகன் தனபால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆனால்  வெங்கட்டனின்  மற்றொரு மகனான வேணுகோபால் தலைமறைவாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என போலீசாருக்கு தெரியவில்லை.  இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

Also Read: நாமக்கல் நூல் மில்லில் வடமாநில இளம்பெண் கொலை.. காதலன் கவலைக்கிடம்

இந்த வழக்கில் தந்தை வெங்கட்டன், மகன் தனபாலுக்கு நான்காண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  மேலும் தலைமறைவாக இருந்த வெங்கட்டனின் மூத்தமகன் வேணுகோபாலை பிடிக்க  நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனிடையே  தற்போது  வெங்கட்டன் மற்றும் தனபால் ஆகியோர் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வந்து விட்டனர். ஆனாலும் வேணுகோபாலை  போலீஸார் கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்  தீவிர நடவடிக்கை எடுத்தார். அதன்படி தனிப்படை போலீசார், வேணுகோபாலை  தீவிரமாக தேடி வந்தனர். அப்போது வேணுகோபால், சேலம் குரங்கு சாவடி பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தது தெரியவந்தது.  இதையடுத்து நேற்று வேணுகோபாலை தனிப்படை   போலீசார் அதிரடியாக  கைது செய்தனர்.

Also Read:  அந்நியன் ஸ்டைலில் அபார நடிப்பு.. போலீசாரையே அலற விட்ட பிக்பாக்கெட் திருடன்

விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.  வேணுகோபால் தலைமறைவாக  இருந்த 25 ஆண்டுகளில்,  24 ஆண்டுகள்  இந்திய ராணுவத்தில் பணியாற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வேணுகோபால் கடந்த 1989ம் ஆண்டில் இருந்து  ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போது தான் நிலத்தகராறில் அடிதடி பிரச்சனை ஏற்பட்டு இந்த கொலை நடந்தது. இதையடுத்து வேணுகோபால் மீண்டும் ராணுவ பணிக்கு சென்றுவிட்டார். ஆனால் அப்போது போலீசாருக்கு அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. அந்த சமயத்தில் வேணுகோபால்  ராணுவத்தில் அரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் வசித்து வந்துள்ளார் என்பது தற்போதைய விசாரணையில்  தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு பணி மூப்பின் காரணமாக , வேணுகோபால் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு செல்லாமல்,  சேலம் அருகே குரங்கு சாவடி பகுதியில் வாடகை வீட்டில் குடுப்பத்திருடன் வசித்து வந்த போதுதான் காவல்துறையினர் தற்போது அவரை கைது செய்துள்ளனர். இதையடுத்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேணுகோபால் சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read:  கள்ளக்காதலுக்கு இடையூறு.. காதல் கணவனை கொன்று உடலை ட்ரம்மில் அடைத்து வைத்த கொடூரம்

25 ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து  வந்த வேணுகோபால்,  இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த சம்பவம் காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வேணுகோபால் தலைமறைவான போது ஏன்?  போலீசார் முறையாக விசாரிக்கவில்லை,  அவர் எங்கு பணியாற்றுகிறார் என்றும்  ஏன்?   விசாரணை மேற்கொள்ளவில்லை என்பது குறித்தும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

First published:

Tags: Arrest, Crime News, Murder, Police