ரூ.1.40 லட்சம் கடனுக்கு ரூ.76 லட்சம் வட்டி: பாதிக்கப்பட்ட ஆசிரியர் போலீசில் புகார்- இருவர் கைது

சேலம் காவல்துறை

சேலத்தில் அளவுக்கு அதிகமாக கந்துவட்டி வசூல் செய்ததாக தொடுக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டனர்.

  • Share this:
சேலம் அம்மாப்பேட்டை கிருஷ்ணன்புதூரைச் சேர்ந்தவர் கோதை (வயது 54 ). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் விஷ்வபிரியா( வயது 38 ). இருவர் வீடும் அருகருகில் இருப்பதால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 2014 ம் ஆண்டு ஆசிரியர் கோதை, விஷ்வபிரியாவிடம் 2 நாட்களில் திருப்பி தந்து விடுவதாக கூறி 10,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அப்போது , 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் வட்டி என விஷ்வபிரியா கூறியுள்ளார். அதன்படி , தொடர்ந்து 2 நாட்களுக்கு தலா 1,000 வீதம் 2 ஆயிரம் ரூபாயை விஷ்வபிரியா வட்டியாக வாங்கியுள்ளார்.

இதனிடையே , தினமும் வட்டி கொடுக்க முடியாததால், அவரிடமே வார வட்டிக்கு ரூபாய் 30 ஆயிரத்தை ஆசிரியர் கோதை வாங்கியுள்ளார். இது போல் படிப்படியாக 1.40 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். இதற்காக 76 லட்சம் ரூபாய் வரை திருப்பி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வட்டி அதிகமாகி விட்டதாக விஷ்வபிரியா கூறியதால், கோதை தனது கணவர் பெயரில் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு பத்திரத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், வாங்கிய கடனுக்கு மேல் அதிகளவு வட்டியை கொடுத்து விட்டதால், வீட்டு பத்திரத்தை கொடுக்குமாறு கோதை கேட்டுள்ளார். அப்போது, கொடுத்த பணத்திற்கு வட்டி, 25 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகி விட்டதாக கூறிய விஷ்வபிரியா, பத்திரத்தை ஆட்டையாம்பட்டியை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கோதை விசாரித்தபோது, போலியான ஆவணங்களை தயாரித்து, லோகநாதன் என்பவர் வீட்டை தனது பெயருக்கே மாற்றியதும் தெரியவந்தது . இதுகுறித்து , அம்மாப்பேட்டை போலீசில் கோதை புகார் அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர், கந்துவட்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விஷ்வபிரியா, அவரது தம்பி கிருஷ்ணசாய் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலை மறைவாக உள்ள லோகநாதனை போலீசார் தேடி வருகிறார்கள்.
Published by:Karthick S
First published: