முதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணிற்கு வேலை வாய்ப்பு!

செளமியாவுக்கு பணி நியமனம் வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி

முதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய பெண்ணிற்கு தனியார் நிறுவனத்தில் மாதம் 17,500 ரூபாய் சம்பளத்திற்கு பணிக்கான ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

  • Share this:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விடுவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை சேலம் வந்தார். சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில், மேட்டூரைச் சேர்ந்த இளம்பெண் செளமியா, தான் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். மேலும், பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்த தனக்கு வேலை கேட்டு முதல்வரிடம் மனு கொடுத்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டதுடன், வறுமையிலும் பொது நிவாரண நிதிக்கு உதவியது மனதை நெகிழ வைத்து விட்டதாகவும்,  பொன் மகளுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை  கிடைக்க ஏற்பாடு செய்யபடும் எனவும் அறிவித்திருந்தார்.

இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி, மேட்டூர் அருகே பொட்டனேரியில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ என்ற தனியார் நிறுவனத்தில் பணி நியமனத்துக்கான ஆணையை, மேட்டூர் அருகே பொட்டனேரியிலுள்ள சௌமியா வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார்.



அப்போது தமிழக முதல்வர் மு .க . ஸ்டாலின் தொலைபேசி மூலம் சௌமியாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

Also Read:   கேரளா சார்பில் வந்த அழைப்பை நிராகரித்த தமிழகத்து வாள்வீச்சு வீராங்கனை.. விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்துவரும் அவலம்!

சௌமியா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது "மிக விரைவாக ஓரிரு நாட்களிலேயே விரைவான நடவடிக்கை எடுத்து எனக்கு பணி நியமன ஆணை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த ஆட்சியிலும் இது போன்ற துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது இல்லை. என்னைப் போலவே அனைத்து மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முதல்வரின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் உண்மையாக உழைப்பேன்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

இதுகுறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, " தமிழக முதல்வர் மேட்டூர் அணையை திறக்க மேட்டூர் வந்துகொண்டிருந்த பொழுது, சௌமியா எனும் இந்த சகோதரி தான் பட்டப்படிப்பு படித்து இருப்பதாகவும் தனக்கு ஏதாவது வேலை இருந்தால் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு ஒரு மனுவை கொடுத்திருந்தார். அந்த மனுவுடன் தனது இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை கொரோனா நிவாரணத்திற்காக வழங்கியிருந்தார்.

இதைப்பார்த்த முதல்வர் அவருக்கு அவரது படிப்புக்கு ஏற்ற வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அந்த உறுதியின் படி தனியார் நிறுவனத்தில் மாதம் 17,500 ரூபாய் சம்பளத்திற்கு பணிக்கான ஆணை தற்பொழுது வழங்கி உள்ளோம் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமைச்சருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி ஆகியோர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Published by:Arun
First published: