மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டவுள்ளதையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அணையில் ஆய்வு செய்தார். காவிரி கரையோரத்திலோ அல்லது தாழ்வான பகுதிகளிலோ உள்ள பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் , மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டவுள்ளது. இதனால், மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் இன்று (08.11.20210 ) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக கடந்த 12.06.2021 அன்று மேட்டூர் அணையினை திறந்து வைத்தார்கள். தற்பொழுது பெய்து வரும் பருவமழை காரணமாக மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை அடுத்த 48 மணி நேரத்தில் எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.70 அடியினை எட்டியுள்ளது. இந்த அணையில் 93.470 டி.எம்.சி வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது நீர் இருப்பு 89.849 டி.எம்.சியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு பிலிகுண்டுவிலிருந்து 28,000 கன அடியும், பாலாற்றில் இருந்து 4,000 கன அடியும் என மொத்தம் 32,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது.
மேலும், கர்நாடகா மாநிலத்தில் உள்ள 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையும், 65 அடி உயரம் கொண்ட கபினி அணையும் முழுமையான நிரம்பியுள்ளதால், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 7,983 கன அடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து 1,900 கன அடி தண்ணீரும் என மொத்தம் 9,883 கள அடி தண்ணீர் தற்பொழுது வந்துகொண்டுள்ளது.
அந்த வகையில் மேட்டூர் அணை நாளை ( 09.11.20210 ) மாவை தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், தண்ணீர் வருகையின் அளவைப் பொறுத்து 30,000 கள அடி அளவிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. எந்த நேரத்திலும் நீர் திறப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால் காவிரி கரையோரமோ அல்லது தாழ்வான பகுதிகளிலோ உள்ள பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க அறிவுருத்தப்படுகிறது.
நீர்வரத்தை வேடிக்கை பார்ப்பதற்காகவோ, நீர்நிலைகளில் விளையாடியோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ நாளை மாலையிலிருந்து ஆற்றின் இரு புறங்களில் உள்ள கரைப் பகுதிகளின் அருகில் செல்வதை தவிர்த்திட வேண்டும். மேலும், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மழையின் மூலம் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் மேட்டூர் அணையினை பொதுப்பணித்துறை அலுவலர்கள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணிநோமும் கண்காணித்து வருகின்றனர். மேலும், டெல்டா மாவட்டங்களை சேர்ந்த 12 மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் வெளியேற்றம் குறித்து உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அணையின் வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வருவாய்த்துறையின் மூலமாக பொதுமக்களுக்கு டாம் டாம் மற்றும் ஒலிபெருக்கியின் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
கரைப் பகுதிகளில் உள்ள பூலாம்பட்டி, தேவூர் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் தங்களது பொழுதுபோக்கிற்காக வேடிக்கை பார்ப்பதையும், படகு சவாரி செல்வதையும் தவிர்த்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விவசாய பகுதிகளில் தண்ணீர் தேங்கும் சூழல் இருப்பதால் அதனை சரிசெய்ய வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப , அவர்கள் தெரிவித்தார்.
Must Read : சென்னை மழை | சாலையில் வெள்ளம்.. 6 சுரங்கப்பாதை மூடல்.. பவர்கட் - தலைநகர் எப்படி இருக்கிறது?
இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (மேட்டூர்) திரு.வீர் பிரதாப் சிங், இ.ஆ.ப, நீர்வளத் துறை செயற்பொறியாளர் (மேட்டூர் அணை) திரு.பெ.தேவராஜன், உதவி செயற்பொறியாளர் திரு.டி.சுப்பிரமணியம், மேட்டூர் அணை உதவி பொறியாளர் திரு.திமதுசூதனன், பேட்டூர் வருவாய் வட்டாட்சியர் திருமதி சு.ஹசீன் பானு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cauvery water, Mettur Dam, Salem