முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அஜித் பட பாணியில் திருட்டு.. கார்த்தி பட பாணியில் போலீஸ் ஆக்‌ஷன்.. அதிர வைக்கும் ஈரானிய கொள்ளை கும்பல்..!!

அஜித் பட பாணியில் திருட்டு.. கார்த்தி பட பாணியில் போலீஸ் ஆக்‌ஷன்.. அதிர வைக்கும் ஈரானிய கொள்ளை கும்பல்..!!

Iranian Gang

Iranian Gang

Iranian Gang | வலிமை திரைப்பட பாணியில் சேலத்தில் செயின் பறிப்பு மற்றும் வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது. அவர்களிடம் இருந்து சொகுசு கார், பைக் மற்றும் 6 பவுன் நகை பறிமுதல்

  • Last Updated :

சேலத்தில் வலிமை திரைப்பட பாணியில் செயின் பறிப்பு மற்றும் வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார், பைக் மற்றும் 6 பவுன் நகை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் நடந்து செல்லும் பெண்களிடம், இருசக்கர வாகனங்களில் வந்து எப்படி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள்  என்பது போன்ற காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதுபோல சேலத்தில் இரு சக்கர வானத்தில் வந்து பெண்களிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 10 ஆம் தேதி சேலம் குகை பகுதியில் நடந்து சென்ற பத்மாவதி என்ற 73 வயது மூதாட்டியிடம் 4 சவரன் தங்கச்சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு வாலிபர்கள் பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த செவ்வாய்பேட்டை காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள ஈரானியன் எனும் கும்பலை சேர்ந்தவர்கள்தான் தொடர்ந்து நகைபறிப்பு மற்றும் வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரிவந்தது.

இதனையடுத்து, தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட பாணியில் அங்கு சென்று முகாமிட்டு கொள்ளையர்களின் நடவடிக்கைகளை கண்காணித்த போலீசார் அங்கிருந்து வழக்கம்போல் சேலத்திற்கு கைவரிசை காட்ட வந்த முகமது ஆசிப் அலி மற்றும் ஷபிஷேக் ஆகிய இரண்டு இளைஞர்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 சவரன் தங்க நகைகள் ஒரு சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநில எல்லைகளையொட்டி அமைந்துள்ள பிதார் மாவட்டம் ஒரு வறட்சியான பகுதி ஆகும். அங்கு வசித்து வரும் ஈரானிய கொள்ளையர்கள் அவ்வப்போது கார் ஒன்றில் தமிழகத்துக்கு வருவது வழக்கம். பின்னர் தனித்தனியாக பிரிந்து தமிழகத்தில் இருசக்கர வாகனங்களை திருடி பின்னர் அது தொடர்பான விசாரணை தொடங்குவதற்குள் நகைபறிப்பு சம்பவங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் காரில் தப்பிச்சென்றுள்ளனர். தமிழகத்தில்தான் பெண்கள் அதிகளவில் தங்க நகைகளை அணியும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஈரோடு, திருப்பூர், கோவை என தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து நகருக்குள் நுழைந்து கைவரிசை காட்டி உள்ளது இந்த கும்பல்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள முகமது ஆசிப் அலி மற்றும் ஷபிஷேக் ஆகியோர் மீது சேலம் மாநகர எல்லைக்கு உட்பட்ட பள்ளப்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, உள்ளிட்ட பல இடங்களில் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு பேரை கைது செய்துள்ள சேலம் செவ்வாய்பேட்டை போலீசார் முக்கிய குற்றவாளியான சல்மான் கான் உள்ளிட்ட 3 பேரை பிடிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க சேலத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

Read More : பெற்ற பிள்ளைகளை போட்டோ எடுத்தது ஒரு குத்தமா? அப்பாவி நபர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த பெண்!

top videos

    தொடர்ந்து நடைபெறும் நகை பறிப்பு சம்பவங்களுக்கு காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகள் முற்றுப்புள்ளி வைக்குமா?  என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.திரைப்பட பாணி போல் நாடு விட்டு நாடு வந்து பல்வேறு வாகன திருட்டு மற்றும் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Actor Ajith, Actor Karthi, Crime News, Salem, Valimai