சேலத்தில் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு துன்புறுத்திய மனைவியை கொலை செய்த கணவர் கைது!

கொலை நடந்த பாஸ்கரின் வீடு

சேலத்தில் தனது சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு தன்னை துன்புறுத்திய மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்

  • Share this:
சேலத்தில் தனது சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு தன்னை துன்புறுத்திய மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்

சேலம் மாநகர், வீராணம் அருகே உள்ள மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(63). இவருடைய மனைவி கல்பனா(59). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிய நிலையில்,  தற்போது விவாகரத்து பெற்றுக்கொண்டு தாய் வீட்டில் வசித்து வருகிறார். பாஸ்கர்  சேலம், தாதகாப்பட்டியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.  இவருக்கு இரண்டு வீடுகள் சொந்தமாக உள்ளது.

இதனிடையே கணவன் பாஸ்கருக்கும் மனைவி கல்பனாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. திருமணமாகி 37 ஆண்டுகள் ஆன நிலையில் கணவரை மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்ட  கல்பனா, அவரை விவாகரத்து செய்யவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் மேலும் இருவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. ஒரே வீட்டில் வசித்தாலும் கணவர் பாஸ்கருக்கு  உணவு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் இன்று 11 மணியளவில் வீட்டிற்கு வந்த பாஸ்கர், சாப்பாடு போடுமாறு  மனைவி கல்பனாவிடம் கேட்டுள்ளார். அப்போது சாப்பாடு இல்லை வெளியே போ என மனைவி கூறியதாக கூறப்படுகிறது.  இதனால் ஏற்பட்ட தகராறு மற்றும்  கடும் வாக்குவாதத்தின் காரணமாக,  ஆத்திரமடைந்த பாஸ்கர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி கல்பனாவின் கழுத்தை அறுத்ததோடு,  6 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். இதில்  ரத்தவெள்ளத்தில் கல்பனா உயிரிழந்தார்.  இதையடுத்து தானும் தற்கொலை செய்ய முயற்சித்து தூக்கு போட சென்றுள்ளார்.  அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு,  காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து வீராணம் போலீசார் பாஸ்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கொலையுண்ட கல்பனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பட்டப்பகலில் கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் மன்னார்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Esakki Raja
First published: