எடப்பாடி அருகே அண்ணியை கொலை செய்து விட்டு கொழுந்தன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள முப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் ( வயது 65 ) . இவரது மனைவி மாதேஸ்வரி ( வயது 55 ) . இவர்களுக்கு கணபதி ( வயது 35 ) என்ற மகன் உள்ளார் . கோவிந்தனின் தம்பி அண்ணாதுரை ( வயது 60 ) .இவரது மனைவி இறந்த நிலையில் , மகன் கோபால் என்பவருடன் தனியாக வசித்து வந்தார் .அண்ணன் கோவிந்தனுக்கும் , தம்பி அண்ணாதுரைக்கும் இடையே குடும்ப சொத்தான 40 சென்ட் விவசாய நிலத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு வந்தது . இதனால் , இரு குடும்பத்தினரும் சரியாக பேசாமல் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
Also Read: கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கண்டித்த கணவனை தீர்த்துக்கட்டி நாடகமாடிய மனைவி கைது
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் , பால் வாங்குவதற்காக மாதேஸ்வரி அங்குள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார் . அப்போது கொழுந்தன் அண்ணாதுரை , கையில் அரிவாளுடன் வந்துள்ளார் . அவர் திடீரென அண்ணி மாதேஸ்வரியை சரமாரியாக வெட்டி வீசினார் . இதில் , தலையில் பலத்த வெட்டுக்காயம் விழுந்ததில் , ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாதேஸ்வரி துடிதுடித்து இறந்தார் . இச்சம்பவத்தை பார்த்த அவ்வழியே வந்தவர்கள் , அலறியடித்துக் கொண்டு ஓடினர் .
அண்ணியை வெட்டி கொலை செய்த அண்ணாதுரை , தனது வீட்டிற்கு சென்று தென்னை மரத்திற்கு வைக்கப்படும் பூச்சிக் கொல்லி மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார் .இதனிடையே இக்கொலை பற்றி தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடம் சென்றனர் . அவர்கள் , கொலையுண்ட மாதேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றினர். தொடர்ந்து கொலையில் ஈடுபட்ட அண்ணாதுரையை பிடிக்க அவரது வீட்டிற்கு சென்றனர் . அங்கு அவர் , விஷ மாத்திரை சாப்பிட்டதில் மயங்கி கிடந்ததால் அவரை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு , அண்ணாதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Also Read: கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த கணவன்.. மிளகாய் பொடி தூவி அடித்துக்கொன்ற மனைவி
இதையடுத்து அண்ணாதுரையின் உடல் பிரேதப் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது. கொலையுண்ட மாதேஸ்வரியின் சடலத்தையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர் . மேலும் , சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி ஆரோக்கியராஜ் நேரில் வந்து விசாரித்தார்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் , 40 சென்ட் நிலத்தை பிரிப்பதில் கடந்த 10 ஆண்டுகளாக அண்ணன் , தம்பியான கோவிந்தனுக்கும் , அண்ணாதுரைக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக அவ்வப்போது அண்ணாதுரை , அண்ணன் குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது . அந்த தகராறு முற்றிய நிலையில் , அண்ணி மாதேஸ்வரியை வெட்டிக் கொன்று விட்டு , இனி தன்னால் சிறையில் வாழ முடியாது எனக் கருதி அண்ணாதுரை தற்கொலை செய்துகொண்டுள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இக்கொலை மற்றும் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commit suicide, Crime News, Death, Murder, Police, Salem