சேலத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபரிடம் இருந்து, வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் மணமுடைந்த இளைஞர் அதே பகுதியில் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் எரிக்கரையில் வசித்து வருபவர் சந்தோஸ்குமார் (29). இவரது தாய் புஷ்பா. தந்தை (ஈஸ்வரன்) சிறு வயதிலேயே இவர்களை பிரிந்து சென்றுவிட்டதால், தம்பி, தங்கையுடன் வசித்து வந்தார். சந்தோஷ் குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலிக்கு இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி சரக்கு வாகனத்தை ( டாடா ஏஸ் ) போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் வாகன ஓட்டுனர் சந்தோஷ் குமார் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது ட்ரங்க் அண்ட் ட்ரைவ் வழக்குப்பதிவு செய்த போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து சந்தோஷ் குமாரை வீட்டிற்கு செல்லுமாறும் காலையில் காவல்நிலையம் வந்து வாகனத்தை எடுத்துக்கொள்ளுமாறும் கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க: உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர் இந்தியா திரும்ப விருப்பம்
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் கொண்டாலாம்பட்டி ரவுண்டானா அருகே இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கி வந்து அதே பகுதியில் சாலையின் நடுவில் நின்று தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
இதையடுத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சுமார் 80 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இச்சம்பவம் நிகழ்ந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் சந்தோஷ்குமார் மதுபோதையில் தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு (309 ஐபிசி ) செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சிகிச்சை பெற்று வரும் சந்தோஷ் குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தான் 15 நாட்களுக்கு முன் புதிதாக வாங்கிய TATA ACE (வண்டி எண் TN 90 H 3645 ) என்ற நான்கு சக்கர சரக்கு வாகனத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி விட்டு வீட்டிற்கு திரும்பி செல்லும்போது, கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே டிராபிக் போலீசார் வாகன தணிக்கை செய்து மது போதையில் இருந்ததாக கேஸ் போட்டு நோட்டிஸ் கொடுத்தாகவும், வாகனத்தை தற்போது தர இயலாது எனவும் கூறினர்.
இதனால் மிகவும் மன வேதனையாக இருந்ததால் தற்கொலை செய்து இறந்துவிடலாம் என முடிவு செய்ததாகவும், 1 லிட்டர் பெட்ரோலை கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் உள்ள இந்தியன் ஆயில் பங்க்கில் வாங்கி கொண்டு தனது மீது ஊற்றி கொண்டு தான் புகைப்பிடிக்க வைத்திருந்த தீப்பெட்டியால் தனது உடலில் தீ வைத்து கொண்டு, ஒரு தேநீர் கடை அருகே ஓடி வந்து விழுந்ததால் அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீ காய வார்டில் சேர்த்ததாக சந்தோஷ் குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.