சேலத்தில் கோவில் நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பகுதிவாசிகள்!

சேலத்தில் கோவில் நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்திய பகுதிவாசிகள்!

திருத்தொண்டர் சபை நிறுவனர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன்

கோவில் பெயரில் எந்த ஆவணமும் இல்லாத நிலையில் இது கோவில் நிலம் என்று கூறி அளக்க வந்திருப்பது தவறு. அரசு எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க உதவ வேண்டும் என்று தெரிவித்தனர்.

  • Share this:
    சேலத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 41 ஏக்கர் கோயில் நிலம் மீட்கும் பணிக்கு, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். . இது கோவில் நிலம் அல்ல, தரிசு புறம்போக்கு நிலம் தான் என பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...

    தமிழகம் முழுவதும் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் நிலங்கள் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலத்தில் பிரசித்தி பெற்ற சித்தர் கோவிலுக்குச் சொந்தமான 41 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதை மீட்கவும்    திருத்தொண்டர் சபை நிறுவனர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

    நீதிமன்ற வழிகாட்டுதல்படி  நேற்று (ஏப்ரல் 23) கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அளவீடு செய்யும் பணி தொடங்கியது.  இந்த கோவிலையொட்டி உள்ள சத்யா நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றியிருந்தனர். முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    சத்யா நகர் பகுதிகுக்கு  வந்த தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை,  50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அளவீடு செய்யவிடாமல் முற்றுகையிட்டனர்.  இது கோவில் நிலம் அல்ல, தரிசு புறம்போக்கு நிலம் என்றும், இங்கு குடியிருப்புகள் இருப்பதை மறைத்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளதாகவும் பல்வேறு ஆவணங்களை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கோயில் புறம்போக்கு நிலம் அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, நாங்கள் சுமார் 80 குடும்பங்கள் 1965 முதல் இங்கு குடியிருந்து வருகிறோம், அரசின் பல்வேறு துறைகளில் உள்ள ஆவணங்களில் இந்த இடம் தரிசு புறம்போக்கு என்றே உள்ளது. அதுமட்டுமல்லாமல் எங்கள் அனைவருக்கும் வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு, ஆதார் என அனைத்தும் உள்ளது. விரைவில் பட்டா கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆனால் கோவில் பெயரில் எந்த ஆவணமும் இல்லாத நிலையில் இது கோவில் நிலம் என்று கூறி அளக்க வந்திருப்பது தவறு. அரசு எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க உதவ வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருத்தொண்டர் சபை நிறுவனர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் கூறுகையில் திருக்கோயிலுக்கு சொந்தமான கோயில் புறம்போக்கு  சுமார் நாற்பத்தி ஒரு ஏக்கர் நிலங்களை நில அளவை செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணி தடை பட்டதற்கு சரியான  ஒருங்கிணைப்பு இல்லாத சூழ்நிலை தான்.எந்த சூழ்நிலையிலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமான நடவடிக்கை மேற்கொள்ள முடியாது இன்னைக்கு இல்லனா நாளைக்கு கண்டிப்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நில அளவை செய்யும் பணி  எக்காரணத்தை கொண்டும் தடைபடாது கண்டிப்பா நில அளவை செய்யப்படும் தமிழகம் முழுவதும் எங்கு கோயில் நிலம் இருந்தாலும்  ஒரு குண்டுமணி அளவு உள்ள இடத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம் என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய இராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் அறநிலைய துறை சார்பில் 4.75 லட்சம் ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் உள்ளது ஆனால் உண்மையிலேயே தமிழகம் முழுவதும் 15 லட்சம் ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது ஐந்து ஆண்டுகளில் முழுமையாக அனைத்து நிலங்கள் மீட்கப்பட்டு கோயில் வசம் ஒப்படைக்கப்படும் இதற்கிடையில் எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் இதை தடுக்க முடியாது என்று கூறினார்.

    சேலம் செய்தியாளர் கோகுலக் கண்ணன்
    Published by:Arun
    First published: