பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள நைனாம்பட்டி பழையபேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், எடப்பாடி அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வெள்ளாண்டிவலசு காந்திநகரை சேர்ந்த சரவணன் (வயது 24) என்ற வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இவர், கடந்த 2 ஆண்டுக்கு முன் மாணவி படித்து வரும் பள்ளியில் ஆண்டு விழாவிற்காக அவருக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்துள்ளார். அந்த பழக்கத்தில், மாணவியின் வீட்டிற்கு வந்து, அவரது பெற்றோரிடமும் பழகியுள்ளார். அவர்களும், தனது மகளுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த மாஸ்டர் என பழகி வந்துள்ளனர்.
Also Read: ஆண்களுடன் பழகாதே..! கண்டித்த தாயை கொலை செய்த 17வயது சிறுமி - தூத்துக்குடியில் பயங்கரம்
இந்நிலையில், கடந்த 22ம் தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாணவி, திடீரென மாயமானார். காலையில் அவரது பெற்றோர் எழுந்து பார்த்தபோது, மகளை காணாது அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர். இதையடுத்து , தங்களது வீட்டிற்கு அடிக்கடிவந்து சென்ற டான்ஸ் மாஸ்டர் சரவணன் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தனர். இதனிடையே மாயமான மாணவியுடன், சரவணன் எடப்பாடி காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது, தாங்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதால், அவரை வீட்டில் இருந்து, அழைத்துக் கொண்டு பழநிக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மாணவிக்கு 15 வயது தான் ஆகிறது என்பதால், இவ்வழக்கு பற்றி விசாரிக்க சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரலேகா விசாரணை நடத்தினார். அதில், பள்ளி ஆண்டு விழாவில் நடனம் கற்றுக்கொடுக்கும் போது நெருங்கிப் பழகி, வீடு வரை வந்து அவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனால், சிறுமி கர்ப்பமடைந்ததும், அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளியில் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
Also Read: ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி - வேலூரில் அதிர்ச்சி சம்பவம்
இதனையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், மாணவியை கர்ப்பமாக்கிய சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை சேலத்தில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.