போலீசார் தாக்கி வியாபாரி உயிரிழக்க என்ன காரணம்? உடற்கூராய்வில் சொல்வது என்ன?

Youtube Video

போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த விவகாரத்தில் அவரது உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்ற பின்னணி வெளியாகியுள்ளது

 • Share this:
  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 47 வயதான முருகேசன். இவர் சோதனை சாவடியில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்தார். சிறப்பு ஆய்வாளர் பெரியசாமி முருகேசை தாக்கும் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து முருகேசன் இறப்பு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

  காட்சிகள் வைரல் ஆனதால், அரசு நேரடியாக தலையிட்டது. உடனே சிறப்பு ஆய்வாளர் பெரியசாமி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

  புதன்கிழமை இரவு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரங்கராஜ் முன்னிலையில் மருத்துவர் கோகுல ரமணன் தலைமையிலான மருத்துவர்கள் முருகேசனின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. முதற்கட்ட உடற்கூராய்வு அறிக்கையில் முருகேசனின் இறப்பிற்கான காரணத்தை விளக்கத்துடன் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

  Also Read : ‘அரசு சார்பில் வீடு வேண்டும்' முதலமைச்சருக்கு டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா கோரிக்கை


  சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி தனது ஜந்தடி நீளமுள்ள லத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் முருகேசனின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு கால்களிலும் தொடைபகுதி மற்றும் கெண்டைகால் பகுதியில் ரத்தம் கட்டும் அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. வயிறு, மார்பு, இரண்டு கைகளின் அக்குள் பகுதிகளிலும் லத்தியால் கடுமையாக தாக்கியதால் உள்ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

  Also Read : அரசு நிலத்தை அரசுக்கே விற்பனை... ரூ.200 கோடி மோசடி செய்தவர்கள் சிக்கியது எப்படி?

  மார்பில் லத்தியாலும், காலால் எட்டி உதைத்ததாலும் மார்பில் உள்ரத்தகாயம் ஏற்பட்டு நுரையீரலில் ரத்தம் கோர்த்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறிப்பிட்டுள்ளனர். காற்று சென்றுவரும் நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் முருகேசனால் மூச்சு விடமுடியாமல் தினறும் நிலைக்கு சென்றார் என்கிறார்கள் குடும்பத்தினர்.

  தரையில் விழுந்ததால் ஏற்பட்ட காயம், பின்னந்தலையில் லத்தியால் அடித்தது ஆகிய காரணத்தால், பின் மண்டை எலும்பு உடைந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறியுள்ளதும் முதற்கட்ட உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. நுரையீரல், தலையில் ஏற்பட்ட கொடுங்காயத்தால் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதே முருகேசனின் உயிர் பிரிய காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: