சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கருப்பூர் அருகே அமைந்துள்ளது
பெரியார் பல்கலைக் கழகம். இங்கு வரலாற்று துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பிரேம்குமார். இவர், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். இவர் மீது
புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஒருவர், பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், சாதி பெயரை கூறி திட்டி மிரட்டல் விடுத்ததாகவும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் செய்ததாக கூறப்படுகின்றது.
பிறகு இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலை கழக நிர்வாகம் , சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தது. இதனையடுத்து சேலம் சூரமங்கலம் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பெரியார் பல்கலை உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் பற்றிய செய்தியை அறிந்த அப் பல்கலை கழக முன்னாள், இன்னாள் மாணவிகள் சிலர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், உதவி பேராசியர் மீதான பழி வாங்கும் நடவடிக்கை இது, என்று தெரிவித்துள்ள மாணவிகள், உதவி பேராசியரை பற்றி விசாரிக்க, பல்கலைக்கழக நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட விசாரணை குழு, மாணவிகளை மிரட்டுவதாகவும், குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவு இருப்பதாக கூறுவதாகவும், ஜாதிய மன நிலையில் நடந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த மார்ச் 1ம் தேதி, பல்கலையின் சிண்டிகேட் கூட்டம் நடக்க இருந்தது. இந்தக் கூட்டத்தில், இயற்பியல் துறைத் தலைவராக பணியாற்றி வரும் குமாரதாஸ் என்பவர், நடப்பு ஆண்டு ஜூன் மாதத்துடன் பணி ஓய்வு பெற உள்ளதால், அவரை மீள் பணியமர்த்தம் செய்வது குறித்து அஜண்டா வைக்கப்பட்டு இருந்தது. பல்கலை ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் வயதை எட்டிவிட்டால், அதற்குப் பின்னர் அவரை மீள் பணியமர்த்தம் செய்யக் கூடாது என்று அரசு ஆணை உள்ளது என்றும், அதனால் குமாரதாஸுக்கு மீள் பணியமர்வு குறித்த தீர்மானத்திற்கு ஒப்புதல் தரக்கூடாது என்றும் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க நிர்வாகியான பிரேம்குமார், உயர்கல்வித்துறை, சட்டத்துறை செயலர்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இதனால் மார்ச் 1ம் தேதி நடக்க இருந்த சிண்டிகேட் கூட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் காட்டமான பல்கலைக்கழக நிர்வாகம், ரகசியம் காக்கப்பட வேண்டிய சிண்டிகேட் தீர்மானத்தை பொதுவெளியில் பகிர்ந்ததாகக் கூறி அவரை, பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் சஸ்பெண்ட் செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து பிரேம்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உரிய பதில்களை தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றம் பல்கலைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தான், பிரேம்குமாருக்கு எதிராக ஒரு மாணவியை தூண்டிவிட்டு பாலியல் புகார் கொடுக்க வைத்திருக்கிறது, முழுக்க முழுக்க பொய்யான புகார் என தெரிவித்துள்ளனர்.
Read More : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேனிக் பட்டன், சிசிடிவி... சென்னை மாநகர பேருந்துகளில் பொருத்தம்
இதனிடையே ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு மற்றும் பேராசிரியர் செந்தாமரையின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி , பல்கலைக் கழகங்களின் வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில், குறிப்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் பிரேம்குமார் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக அவரை பணியிடை நீக்கம் செய்து துணைவேந்தர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் , பொய்யாக அவர் மீது பாலியல் புகார் கொடுக்கச் செய்து , காவல் துறை நடவடிக்கையை எடுக்கச் செய்துள்ளதை கண்டிக்கிறோம். பல்கலைக்கழக சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் செயல்பட்டு வரும் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொ) ஆகியோரை பணியிடை நீக்கம் செய் திட வேண்டும் எனக் தெரிவித்துள்ளனர்.
Must Read : தமிழ்நாட்டுக்கான புதிய கல்விக் கொள்கை- வல்லுநர்கள் குழுவை அமைத்த தமிழக அரசு
இந்த நிலையில் நேற்று சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன் மற்றும் சூரமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார், சேலம் பெரியார் பல்கலை கழகம் சென்றனர். உதவி பேராசிரியர் மீது புகார் கொடுத்த மாணவியுடன் பயின்று வரும் மாணவ-மாணவிகள் சிலரை அழைத்து விசாரித்தனர். இவர்கள் தவிர சில உதவி பேராசிரியர்களையும் அழைத்துச் சென்று காவல்துறையினர் தனித்தனியே விசாரித்தனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விரைவில் உதவி பேராசிரியர் பிரேம்குமாரிடம் விசாரிக்க உள்ளதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் நியமனத்தில் ஊழல், தேர்வில் தில்லுமுல்லு, குறிப்பிட்ட சமூக ஆதிக்கம், இந்துத்துவா அரசியலுக்கு ஆதரவு, பெரியார் சிலை மற்றும் பெயர் பலகை மறைப்பு என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கித் திணறி வரும் இந்தப் பல்கலை, ஆசிரியர்களை மிரட்ட பாலியல் புகார் எனும் ஆயுதத்தை கையில் எடுத்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.