சேலத்தில் அதிக வட்டி தருவதாக கூறி ரூபாய் 4 கோடி மதிப்புள்ள நகைகளுடன் தலைமறைவான தம்பதியை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). இவரது மனைவி லலிதா. இந்த தம்பதி சேலம் ராஜகணபதி கோவில் அருகே லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வந்தனர். இந்தக் கடையின் மூலம் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே நகை சீட்டு நடத்தி வந்ததாகவும், ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதா மாதம் ரூபாய் 3 ஆயிரம் வட்டியும், 6 பவுன் தங்க நகை டெபாசிட் செய்தால் அதற்கு வட்டியாக மாதம் ரூபாய் 2500 வழங்கி வந்ததாகவும் கூறப்படுகின்றது.
Also Read: அன்னூரில் நண்பனை ஓட ஓட வெட்டிக்கொன்ற இளைஞர்கள் - பட்டப்பகலில் நடந்த பயங்கரம்
இவர்களிடம் சேலம் டவுன் மற்றும் பொன்னம்மாப்பேட்டை, அம்மாபேட்டை, வீராணம், வலசையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் நகைச்சீட்டில் சேர்ந்ததாக தெரிய வருகிறது. கடந்த சில மாதங்களாக நகைச்சீட்டு சேர்ந்தவர்களுக்கு பணம் திருப்பித் தராமல், சிலருக்கு வட்டித் தொகை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் இன்று நகை கடை திறக்கப்படவில்லை. கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு கடை திறக்கப்படும் என கடையின் முன்பு எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தங்கராஜன் வீட்டுக்கு சென்றனர் .அங்கு தங்கராஜின் வீட்டு பூட்டப்பட்டு இருந்தது .பின்னர் தங்கராஜ் அவரது மாமனார் வீட்டில் இருப்பதாக கேள்விபட்ட பொதுமக்கள் பொன்னம்மாபேட்டை அருகே வசிக்கும் தங்கராஜின் மாமனார் வீட்டிற்கு வந்து இன்று காலை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read : காதலியுடன் இளைஞர் மாயம்.. தாயை கட்டிவைத்து அடித்த கொடூரம்
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தங்கராஜ், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகை கடையை காலி செய்துகொண்டு பொருட்களை காரில் ஏற்றிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகள் இடம் வழங்கியுள்ளனர்.
இந்த வீடியோவில் தங்கராஜ் மற்றும் கடை ஊழியர்கள் நகை கடைக்கு வருகிறார்கள், சிலர் கடையை திறந்து உள்ளே இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை காரில் ஏற்றிக் கொண்டு செல்வதும் பதிவாகி உள்ளது. எனவே தங்கராஜும் அவரது மனைவி லலிதாவும் சேர்ந்து திட்டமிட்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளது இதன் மூலம் தெரியவந்தது.
மேலும் தங்கராஜ் தனது தங்க நகை கடைக்காக, நகை வியாபாரிகள் பலரிடம் தங்க கட்டிகள் மற்றும் வெள்ளி கட்டிகள் வாங்கியிருந்தார் . இதற்கு அவர் பணம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
தங்கராஜ் சீட்டு நடத்தியதிலும், நகைகள் வாங்கியதிலும் ரூபாய் 4 கோடி வரை மோசடி செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இதன் பேரில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.