ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயிலுக்கு போயிட்டு வந்தால்தான் தமிழகத்தில் பிரபலமாக முடியும் - அண்ணாமலை பேச்சு

ஜெயிலுக்கு போயிட்டு வந்தால்தான் தமிழகத்தில் பிரபலமாக முடியும் - அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை

அண்ணாமலை

Annamalai : ஜெயிலுக்கு போயிட்டு வந்தால்தான் தமிழகத்தில் பிரபலமாக முடியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சேலத்தில் பேசினார். மேலும், தமிழகத்தில் திமுக அரசு செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஊழல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு பாராட்டு தெரிவித்து, மக்களுக்கு நன்றி கூறும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் அரசியல் ஒரு பக்கமாகவே சென்று கொண்டிருக்கிறது. இந்திய சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு கிருஸ்தவர்கள் மிகுந்த மாநிலங்களில் தற்போது பாஜக வெற்றி பெற்றுள்ளது. 8 ஆண்டுகள் ஆகியும் மோடியின் ஆட்சி மீது மக்களுக்கு சலிப்பு ஏற்படவில்லை. ஆனால், தமிழகத்தில் திமுகவின் ஆட்சி எப்போது முடியும் என மக்கள் விரும்புகின்றனர்.

தமிழகத்தில் தற்போது 12,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 7,500 மெகாவாட் மின்சாரம் மத்திய அரசு வழங்குகிறது. இதில் 5% மட்டுமே மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு மின்சாரம் வழங்காததால்தான் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு என முதலமைச்சர் வேடிக்கையாக பேசுகிறார்.

தமிழகத்தில் செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் மின்சாரத்தை வாங்கி அதில் ஊழல் செய்ய தி.மு.க அரசு முயற்சிக்கிறது. எதை எல்லாம் பார்க்க முடியாதோ அதில் எல்லாம் தி.மு.க. விஞ்ஞான முறையில் ஊழல் செய்கிறது என்று விமர்சித்தார்.

பெட்ரோலுக்கு மாற்றாக இ-வாகனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்; இதற்கு மத்திய அரசு 50,000 ரூபாய் மானியம் வழங்குகிறது என்றார். டாஸ்மாக்கை வைத்துதான் தமிழக அரசு நிர்வாகம் செய்கிறது. டாஸ்மாக்கை மூடினால் அரசு அலுவலர்கள் யாருக்கும் தமிழக அரசால் அடுத்த மாதம் சம்பளம் வழங்க முடியாது. டாஸ்மாக்கை மூட வேண்டும் என ஏற்கனவே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலினால் தற்போது முதலமைச்சராக இருந்தும் கூட தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட முடியாது.

அண்ணாமலை

தி.மு.க.வின் ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது. சமூக நீதி என்கிற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் தி.மு.க. இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகிறது. ஆனால் உண்மையான சமூக நீதிக்கு பாஜகதான் எடுத்துக்காட்டு. திமுகவில் வாரிசு அரசியல் மட்டுமே நடக்கும்போது சமூக நீதியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். மோடிக்கு பிறகு அவரது வாரிசு யாரும் பிரதமர் பதவிக்கு வரப்போவதில்லை என்று கூறினார்.

Must Read : தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

இதனிடையே, முதல்வரின் துபாய் பயணம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ள பாஜக பிரமுகர் அருள் பிரகாஷ்க்கு மேடையில் சால்வை அணிவித்து அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். ஜெயிலுக்கு போயிட்டு வந்தால்தான் தமிழகத்தில் பிரபலமாக முடியும். மிசாவை பார்த்து பயப்படாத ஸ்டாலின் சமூக வலைத்தளத்திற்கு பயப்படுகிறார் என்று விமர்சித்தார்.

Published by:Suresh V
First published:

Tags: Annamalai, BJP, Power cut, Salem