தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு அரசுக்கு வரியினங்கள் செலுத்தாமல் தங்கம், வெள்ளி நகைகளை கடத்தும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை வணிக வரித்துறை அதிகாரிகள் கண்காணித்து மடக்கி பிடித்து வருகின்றனர். சாலை மார்க்கமாக தங்கம், வெள்ளி நகைகளை எடுத்துச்சென்றால், சோதனையில் பிடிபட நேரிடுகிறது என்பதால் ரயில்களில் கடத்திச் செல்லும் சம்பவங்கள் அதிகளவு நடைபெற்றுவருகிறது.
இதனை கண்காணித்து பிடிக்கும் பணியில் ஆர்பிஎப் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு ரயில்களில் நகைகளை கடத்திச்செல்கின்றனர். அதேபோல், சேலத்தில் இருந்து வெள்ளி பொருட்களை பெங்களூருக்கு கடத்துகின்றனர். இதனை ஆர்பிஎப் போலீசார் கண்காணித்து பிடித்து, மாநில வணிக வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர்.
இந்த நிலையில், சேலம் வழியாக கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற இன்டர்சிட்டி ரயில் நேற்று ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரயிலில் ஆர்பிஎப் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கோவையை சேர்ந்த அழகிரி ( வயது 46 ) என்பவரின் பையை சோதனையிட்ட போது , அந்த பையில் உரிய ஆவணம் இல்லாமல் தங்க நகைகளை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து நகைப பையை பறிமுதல் செய்த ஆர்பிஎப் போலீசார், அழகிரியை சேலம் ஆர்பிஎப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நகை கடையில் இருந்து 1.78 கோடி ரூபாய் மதிப்பிலான 3.9 கிலோ தங்க நகை களை உரிய ஆவணம் இல்லாமல் திருப்பத்தூர், வாணியாம்பாடி, குடியாத்தம் பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு சப்ளை செய்ய சென்றது தெரியவந்தது.
Read More : கோவையில் சுயேட்சையாக போட்டியிடும் ‘பஞ்சாப் தமிழர்’ - ஆதரவாக வீடியோ வெளியிட்ட சினிமா பிரபலங்கள்
இதையடுத்து நகையை எடுத்து வந்த அழகிரியையும் , 3.9 கிலோ தங்க நகைகளையும் வணிக வரித்துறை அதிகாரிகளிடம் ஆர்பிஎப் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர், வணிகவரி அதிகாரிகள் ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த தங்க நகைகளுக்கு 10.71 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
Must Read : பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது..
ரயில்களில் சட்ட விரோதமாககடத்தி வரப்படும் கஞ்சா, போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்வதோடு, அரசுக்கு உரிய வரியை செலுத்தாமல் எடுத்து வரப்படும் நகைகளை பறிமுதல் செய்து, வணிகவரி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், இதற்காக சென்னை, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட முக்கிய ரயில்வே நிலையங்களில் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொள்ளப்படுவதாகவும், சந்தேகப்படும்படி நபர்களை பிடித்து, பரிசோதனை நடத்துவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.