திருச்சியுடன் சேர்ந்து சேலம் விமான நிலையமும் தனியார்மயமாகிறது

சேலம் விமான நிலையம் (மாதிரிப் படம்)

திருச்சி விமானநிலையத்துடன் சேர்ந்து சேலம் விமான நிலையமும் தனியார்மயமாக்கப்படவுள்ளது.

  • Share this:
விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே அகமதாபாத், மங்களூர், லக்னோ, கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் தனியாருக்கு கடந்த ஆண்டு ஏலம் விடப்பட்டன. இரண்டாம் கட்டத்திற்கு திருச்சி, புவனேஷ்வர், அமிர்தசரஸ், ராய்ப்பூர், இந்தூர் மற்றும் வாரணாசி ஆகிய ஆறு விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது ஏலத்தின் போது, அதிக வருமானம் ஈட்டும் இந்த 6 விமான நிலையங்களுடன், குறைந்த வருமானம் ஈட்டும் 7 விமான நிலையங்களை இணைத்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, தமிழகத்தில் திருச்சி விமான நிலையத்துடன் இணைந்து சேலம் விமான நிலையமும் ஏலத்தில் விடப்பட உள்ளது. திருச்சி விமான நிலையத்தை ஏலத்தில் எடுக்கும் அதே நிறுவனம்தான் சேலம் விமான நிலையத்தையும் நிர்வகிக்கும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் புவனேஸ்வர் விமான நிலையத்துடன் ஜர்ஸுகுடா விமான நிலையத்தையும், குஷினகர் மற்றும் கயா விமான நிலையங்களை வாரணாசியுடனும், காங்க்ரா விமான நிலையம் அமிர்தசரஸுடனும், ஜல்கான் விமான நிலையம் ராய்ப்பூருடனும், ஜபல்பூர் விமான நிலையம் இந்தூருடனும் வளர்ச்சிப் பணிகளுக்காக இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எதன் அடிப்படையில் விமான நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் கேட்டபோது, "மொத்த முனையப் பகுதி, வருவாயின் வளர்ச்சி விகிதம், ஆக்கிரமிப்பு வீதம், மொத்த இயக்க செலவுகள், பயணிகளின் இயக்கச் செலவுகள் போன்ற அம்சங்களின் அடிப்படையில் தனியார் பங்களிப்புடன் செயல்படும், அரசு, தனியார் பங்களிப்பு முறையில் விமான நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

விமானப் போக்குவரத்து இயக்கம், பயணிகளின் எண்ணிக்கை, கையாளப்படும் சரக்கு அளவுகள், எதிர்கால மேம்பாடு மற்றும் விரிவாக்கத் திட்டங்கள்,  பொருளாதார கவர்ச்சி, விமான நிலையம் அமைந்துள்ள நகரின் மக்கள் தொகை, மாநில உள்நாட்டு உற்பத்தி போன்ற அடிப்படை அம்சங்களும் அதில் அடங்கும்" எனத் தெரிவித்தார்.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் புவனேஸ்வர், அமிர்தசரஸ், இந்தூர் மற்றும் திருச்சி ஆகிய விமான நிலையங்கள் முறையே ரூ. 34.22 கோடி, ரூ .92 லட்சம், ரூ .4.47 கோடி மற்றும் ரூ. 22.85 கோடி லாபம் ஈட்டியுள்ளன.

அதேசமயம், வாரணாசி மற்றும் ராய்ப்பூர் விமான நிலையங்களில் ரூ .1.6 கோடி மற்றும் ரூ .26.65 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஜார்சுகுடா, கயா, காங்க்ரா, ஜல்கான், ஜபல்பூர் மற்றும் சேலம் ஆகிய சிறிய விமான நிலையங்கள் முறையே ரூ.16.29 கோடி, ரூ. 24.68 கோடி, ரூ. 9.72 கோடி, ரூ. 3.72 கோடி, ரூ.19.24 கோடி மற்றும் ரூ .8.76 கோடி இழப்புக்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: