தமிழகத்தில் மருத்துவ சந்தையில் களைகட்டும் போலி ஆக்சி மீட்டர் விற்பனை; உயிருடன் விளையாடும் போலிகள்!!

போலி ஆக்சிமீட்டர்

உயிரற்ற ஜடப் பொருளான மரக்குச்சி, பேனா உள்ளிட்டவைகளை இந்த போலி ஆக்சிமீட்டரில் வைத்து சோதனை செய்தாலும், ஆக்சிஜன் அளவும், நாடித்துடிப்பும் காட்டுகிறது.

 • Share this:
  தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் சராசரியாக நாளொன்றுக்கு 35,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோன்று உயிரிழப்பும் அதிகமாக உள்ளது.
  இந்த கொரோனா இரண்டாம் அலை பரவலில் காய்ச்சல், அறிகுறிகளுடன் நுரையீரலையும் பாதிக்கிறது. இதை நாம் கண்டு கொள்ளாமல் இருந்தால், நுரையீரல் பாதிப்பு அதிகமாகி உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைக்காத சூழலில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

  இதுபோன்ற. உடலில் ஆக்ஸிஜன் இல்லாமல் ஏற்படும் உயிரிழப்புகள் தற்போது அதிகமாக உள்ளது. கொரோனா அறிகுறியும்,  நுரையீரல் பாதிப்பும் தமக்கு உள்ளதா என்பதை கண்டறிய தற்போது அனைத்து தரப்பினரும் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை  கண்டறியும் ஆக்சி- மீட்டரை  (OXI METER)  வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இதனால், மருத்துவ சந்தையில் போலி ஆக்சி மீட்டர் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.

  இதுபோன்ற சமயத்தில் ஒருவருக்கு உடல் சோர்வாக இருந்தாலும், காய்ச்சல் இருந்தாலும் கொரோனா அறிகுறியாக இருந்தாலும், கடைகளில் வாங்கிய போலி ஆக்சி மீட்டரை வைத்து சோதனை செய்து கொண்டு, உடலில் ஆக்சிஜன் அளவு சரியாக உள்ளது என்று நினைத்துக் கொண்டு அவரவர் வீட்டிலேயே  தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர்.

  ஒரு கட்டத்தில் நுரையீரல் பாதிக்கப்பட்டு,  உடலில்  உள்ள ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் அவர்கள் உயிர் உயிரிழக்க நேரிடுகிறது. முன்னரே  பாதிப்பை கண்டுபிடித்து சிகிச்சைக்கு சென்றால் காப்பாற்றுவது எளிது.

  நுரையீரல் பாதித்தாலும் தாமதமான சிகிச்சையால், உயிரிழப்பு ஏற்படுவது முக்கிய காரணமாக உள்ளது. தற்போது மருத்துவ சந்தையில் போலி ஆக்சி மீட்டர் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. தரமான மின்னணு சாதனங்கள்,  அலைபேசிகள்,  இயந்திரங்கள் உள்ளிட்டவற்றில் போலிகள் வந்தாலும் உயிரை காப்பாற்றக்கூடிய மருத்துவக் கருவிகளிலும் போலிகள்  உலா வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  இந்த கொடுரமான நோய்தொற்று காலத்தில், பணம் சம்பாதிப்பதற்காக பலரின் உயிரோடு விளையாடுகின்றன இந்த போலி தயாரிப்புகள். இதில் ஒன்று தான் சீனா தயாரிப்பாக வரும் போலி ஆக்சி  மீட்டர்.  இந்த வகை ஆக்சி  மீட்டர்கள் 500 ரூபாயிலிருந்து கிடைக்கிறது.

  இந்த போலி ஆக்சி மீட்டரை வைத்து உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்டறிந்து, சீராக உள்ளது என நினைத்து பலர் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து இருக்கும் என்பதுதான் உண்மை. இதற்கு காரணம் போலி ஆக்சி  மீட்டர்கள்.

  இது எவ்வாறு  உறுதி படுத்துகிறது என்றால், ஒருவருடைய உயிருள்ள உடலில் ஆக்சிஜன் அளவு, நாடித்துடிப்பு காட்டுவதற்கு தான் இந்த ஆக்சி  மீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆக்சி மீட்டரில் ஒருவரின் விரலை வைத்து அவரது உடலில் உள்ள ஆக்சிஜன்  அளவு  கண்டறியப்படுகிறது. உடலில் ஆக்சிஜன் அளவு 90 முதல் 96 என இருந்தால் ஆக்சிஜன் அளவு சீராக உள்ளது என உறுதிப்படுத்தப்படும். 90க்கு கீழே சென்றால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருகிறது என உறுதியாகிறது.

  அப்படி இருக்க, உயிரற்ற ஜடப் பொருளான மரக்குச்சி, பேனா உள்ளிட்டவைகளை இந்த போலி ஆக்சிமீட்டரில் வைத்து சோதனை செய்தாலும், ஆக்சிஜன் அளவும், நாடித்துடிப்பும் காட்டுகிறது. உயிரோடு இல்லாத ஒரு பொருளுக்கு உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவும் நாடித்துடிப்பும் காட்டும் ஒரு போலி ஆக்சி மீட்டரை  வைத்து  கொண்டு, உயிருள்ள ஒரு நபர் தனது நாடித்துடிப்பையும், ஆக்சிஜன் அளவையும் கண்டறிந்து அவர் உடல்நிலை நல்லா இருக்கு என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது உயிருக்கு ஆபத்தான நிலையில் முடிந்து விடுகிறது.

  இது போன்ற போலி ஆக்சி - மீட்டர் சந்தையில் அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. எனவே தரமான ஆக்சி மீட்டர்களை வாங்கி அது தரமானது தானா? என்று மருத்துவரிடம் ஆலோசித்த பிறகே அந்த ஆக்சி மீட்டரை பயன்படுத்த வேண்டும்.  நேரடியாக சென்று மருந்து கடைகளில் வாங்கி போலி ஆக்சி மீட்டர்களை வீட்டில் வைத்து பயன்படுத்தி வந்தால், உயிருக்கு ஆபத்தில் முடியும். எனவே  அரசும் மருத்துவ சந்தையில் அதிகமாக உலா வரும் போலி ஆக்சி மீட்டர்களை கண்டறிந்து விற்பனையை தடை செய்ய வேண்டும். பொது மக்களும்  மருத்துவரிடம் ஆக்சி மீட்டரை காண்பித்து பயண்படுத்தினால் உயிரிழப்பை தவிர்க்கலாம்.

  செய்தியாளர்  - கருணாகரன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: