• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேசத்தை வளர்த்தெடுக்க உதவும் விளையாட்டு - சத்குரு

தேசத்தை வளர்த்தெடுக்க உதவும் விளையாட்டு - சத்குரு

சத்குரு

சத்குரு

தேசத்தை வளர்த்தெடுக்க உதவுவது விளையாட்டு என சத்குரு தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பல வருடங்களுக்கு முன் முதன்முதலாக கிராமப் புத்துணர்வு இயக்கத்தை நாம் துவங்கியபோது நடந்தது இது. கிராம மக்களுக்கு ஒரு தியான செயல்முறையை வழங்க நாம் விரும்பினோம். முதல் நாள் வகுப்புக்கு ஒரு நூறு பேருக்கு மேல் வந்திருந்தார்கள். மூன்றாவது நாள் நாம் அனைவருக்கும் மதிய உணவு பரிமாறினோம். ஆனால் நான்காவது நாள் பார்த்தால் பாதிப் பேர் வகுப்புக்கே வரவில்லை.

ஏன் என்று நாம் விசாரித்தபோது, ஒரு தரப்பினர் அவர்களை வரவேண்டாம் என்று சொல்லி விட்டதாக தெரியவந்தது. ஏனென்றால் அவர்களுடன் சரிசமமாக அமர்ந்து உணவு உண்பதை இந்த தரப்பு ஜாதியினர் விரும்பவில்லை. இதுதான் பிரச்சினை என்றால் இதற்கு மேல் வகுப்பை தொடர்வதில்லை என முடிவு செய்தேன். வகுப்பை அப்படியே பாதியில் நிறுத்தினோம்.ஆனால் சற்றே கவனித்துப் பார்த்தபோது, இது சில ஆயிரம் ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் ஒரு பிரச்சினை என்பதையும் பார்த்தோம். இதை ஒரேநாளில் தீர்க்க முடியாது. எல்லோரும் சேர்ந்து உணவருந்தும்படி நாம் சொன்னது இப்போது ஒரு சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. எல்லோரும் சேர்ந்து உணவருந்துவதுதானே அவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது. எனவே எல்லோரும் சேர்ந்து விளையாடும் வகையில் நிகழ்ச்சியை மாற்றியமைத்து விடுவது என முடிவு செய்தோம்.எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்த ஒரு அம்சம், கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஒட்டுமொத்த பரிமாணத்தையே மாற்றியமைத்தது. சேர்ந்து விளையாடும்போது அவர்களைப் பற்றி அவர்கள் வைத்திருந்த மொத்த அடையாளங்களையும் மறந்தார்கள். விளையாட்டின் அழகே இதுதான் - நீங்கள் களத்தில் குதித்ததும் எழும் தன்னை மறந்த உணர்வில், தானாகவே உங்களின் அடையாளங்கள் நொறுங்குகிறது.எப்போதுமே, உலகம் முழுவதிலும் நடக்கும் நம் நிகழ்ச்சிகள் அனைத்திலும் நாம் விளையாட்டுகளைப் பயன்படுத்துகிறோம். எந்த ஒரு தியான செயல்முறையை கற்றுக்கொடுப்பதற்கும் முன்பாக, அதற்கான தீட்சை வழங்கும் முன் அனைவரும் எளிதாக கலந்துகொண்டு விளையாடும் விளையாட்டுப் போட்டிகள் ஏதாவது நடக்கும். கூச்சலும், ஓடியாடி விளையாடுவதுமாக, அனைவரும் மீண்டும் குழந்தைகள் ஆகிவிடுவார்கள். அந்த சுதந்திரமான உணர்வு இல்லை என்றால், மனம்விட்டு சிரிக்கவோ, கூச்சலிடவோ, ஓடியாடவோ அவர்கள் தயங்கினால் அவர்களால் நிச்சயமாக தியானம் செய்ய முடியாது.அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் ஆடுகளம்:

ஜாதி மற்றும் பல பாரபட்சங்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் நாம் ஒன்றை கவனித்தோம். கிராம அளவிலான அணிகள் உருவாக்கப்பட்டு, மற்ற கிராமங்களுடன் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் அவர்கள் விளையாடத் துவங்கியதும், யாரெல்லாம் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்கள் அவரவர் கிராமத்தின் ஹீரோவாக மாறி இருந்தார்கள். இவர் எந்த ஜாதி என்று யாருமே பார்க்கவில்லை - அவர்களது கிராமத்து அணியின் வெற்றி நாயகன் என்பதுதான் மிக முக்கியமானதாக இருந்தது. முழுமையாக இல்லை என்றாலும், விளையாட்டுகள் ஓரளவிற்கு ஜாதி முறையை சமன்படுத்தி இருக்கிறது. பரஸ்பர ஏற்றத்தாழ்வுகளை சீரமைக்க ஒரு பாலமாக இருக்கிறது.இப்போதும் கூட அவர்களது கிராம அணி போட்டியில் கலந்துகொள்ளும்போது எல்லா ஜாதி பிரிவினரும் வருவார்கள். அவர்களுக்கிடையே இருந்த அடையாளம் மெல்லமெல்ல கரைந்து வருகிறது. போட்டி துவங்கும்முன் அவரவர் மக்களுடன் குழுவாக நின்றுகொண்டு இருப்பார்கள். விளையாட்டு சூடு பிடித்ததும் பார்வையாளர்களும் அந்த வேகத்தில் அனைவருடனும் கலந்து விடுவார்கள். ஒருவரை ஒருவர் தோளிலும் முதுகிலும் தட்டிக்கொண்டு உற்சாகமும் ஆரவாரமுமாக யார் எவர் என்பதையே மறந்திருப்பார்கள். இங்கேதான் விளையாட்டின் அழகு வெளிப்படுகிறது.ஈடுபாடு இல்லாமல் உங்களால் விளையாட முடியாது. எந்த விளையாட்டாக இருந்தாலும், ஈடுபாடுதானே அதன் உயிர்துடிப்பாக இருக்கிறது. ஈடுபாடு இல்லை என்றால் அங்கே எந்த விளையாட்டும் இருக்காது. விளையாட்டு உருவாக்கும் இந்த ஈடுபாடு இன்னும் பெரிதான அம்சங்களுக்கு அவர்களை தயார் செய்கிறது.
விளையாட்டுகளை பயன்படுத்தி கிராமங்களில் உள்ள மக்களை அசைவற்று தியானத்தில் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கிறோம். இது அவர்கள் வாழ்வில் சாத்தியம் என்பதே அவர்களால் கற்பனை செய்து பார்க்காத ஒன்று. இதனால்தான் விவேகானந்தர், பிரார்த்தனை செய்யும்போது இருப்பதைவிட, ஒரு பந்தை உதைக்கும்போது கடவுளுக்கு இன்னும் நெருக்கமாக இருப்பீர்கள் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: