உலகளவில் மண் வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாட்களில் 27 நாடுகளுக்கு சத்குரு அவர்கள் தனி ஆளாக 30 ஆயிரம் கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணிக்க உள்ளார். இதையொட்டி, ஏராளமான ஈஷா தன்னார்வலர்கள் இன்று (மார்ச் 5) காலை ஆதியோகி முன்பு திரண்டு சத்குருவை வழியனுப்பி வைத்தனர்.
மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கும் அவர் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியா வந்து தமிழ்நாட்டில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். இதற்கிடையே, ஐவெரி கோஸ்ட் நாட்டில் ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD) நடத்தும் COP 15 என்ற சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ளார். இதில் 170-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டிலும் சத்குரு கலந்து கொண்டு உரை ஆற்ற உள்ளார்.
இதற்கு முன்னதாக, கோவையில் இருந்து இன்று புறப்பட்டு அமெரிக்காவுக்கு செல்லும் அவர் அங்குள்ள பல்வேறு சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க இருக்கிறார். இதை தொடர்ந்து கரீபியன் தீவுகளுக்கு பயணிக்கும் அவர் 9 முதல் 11 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு சத்குரு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
உலகளவில் மண் வளத்தை பாதுகாப்பதற்காக ‘மண் காப்போம்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம். உலகம் முழுவதும் உள்ள பல விஞ்ஞானிகளும், ஐ.நா அமைப்புகளும் மண் வளம் இழப்பதால் ஏற்பட போகும் பேராபத்து குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். 2045-ம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 900 கோடியாக அதிகரித்துவிடும் எனவும், ஆனால், உணவு உற்பத்தி தற்போது இருப்பதை விட 40 சதவீதம் குறைந்துவிடும் எனவும் கூறுகின்றனர்.
Also read... உக்ரைனில் நிற பிரச்சினை உள்ளது... ரஷ்யா வழியாக மாணவர்களை அழைத்து வருவது பாதுகாப்பானது - ஜக்கிவாசு தேவ்
இதனால், 192 நாடுகளில் மண் வள பாதுகாப்பு குறித்த கொள்கைகளையும் சட்டங்களையும் உருவாக்க நாங்கள் வலியுறுத்த உள்ளோம். இதற்காக, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும் பேசி வருகிறோம். 730 அரசியல் கட்சிகளுக்கு தங்களின் தேர்தல் அறிக்கைகளில் மண் வள பாதுகாப்பை முக்கிய அம்சமாக சேர்க்க வேண்டும் என கடிதம் எழுதி இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் அங்குள்ள விவசாய முறைகள் மற்றும் மண்ணின் தன்மையை அடிப்படையாக கொண்டு மண் வள பாதுகாப்பு கொள்கைகளை தயாரித்து இருக்கிறோம்.
இந்த முயற்சியில் ஐ.நாவின் அங்கமாக இருக்கும் UNCCD, UNEP, WFP ஆகிய 3 அமைப்புகள் ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் இணைந்து செயலாற்ற உள்ளனர். அத்துடன், உலக அளவில் பிரபலமான இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினரும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கெடுக்க உள்ளனர்.
இந்தப் பயணத்தில் பல சவால்கள் இருக்கின்றன. ஐரோப்பாவில் பனி பொழிய தொடங்கி உள்ளது. நான் அரேபிய நாடுகளில் மே மாதம் பயணிக்கும் போது வெயில் உச்சத்தை தொட்டு இருக்கும். இந்தியாவிற்குள் நுழையும் போது பருவமழை ஆரம்பிக்கும். இதுதவிர, தற்போது போர் வேறு நடக்கிறது. போர் நடக்கும் அந்த நாடுகளில் எல்லைகளை ஒட்டிய பகுதிகள் வழியாக பயணிக்க வேண்டிய தேவையும் ஏற்படும். மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த முக்கியமான பணியில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்.
இவ்வாறு சத்குரு கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jakki Vasudev, Sadhguru