• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • கோவில்களை பக்தர்களிடம் ஒப்படையுங்கள்: சத்குரு கோரிக்கைக்கு திரைபிரபலங்கள் ஆதரவு

கோவில்களை பக்தர்களிடம் ஒப்படையுங்கள்: சத்குரு கோரிக்கைக்கு திரைபிரபலங்கள் ஆதரவு

ஸ்ரீதிவ்யா | கங்கனா | கஸ்தூரி

ஸ்ரீதிவ்யா | கங்கனா | கஸ்தூரி

கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சத்குரு கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் அவருக்கு விரேந்திர சேவாக், கங்கனா ரனாவத், கஸ்தூரி, ஸ்ரீநிதி ஷெட்டி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களை பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சத்குரு நீண்ட நாள்களாக வலியுறுத்திவருகிறார். அதற்காக #freetntemple என்ற இயக்கத்தையும் முன்னெடுத்து வருகிறார்.

  அவருடைய முன்னெடுப்புக்கு திரைப் பிரலங்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில் இன்று தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் சிதைந்த நிலையில் இருக்கும் கோயில்களை வீடியோ பதிவாக சத்குரு வெளியிட்டுள்ளார். தமிழக கோவில்களை விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  இந்த வீடியோவில் பேசும் சத்குரு, ‘#கோவில்அடிமைநிறுத்து என்ற இயக்கம் ஆர்ப்பாட்டம் செய்வதற்கோ, போராட்டம் செய்வதற்காகவோ தொடங்கப்படவில்லை. மேலும், யாரோ ஒரு தரப்பினரை தாக்கும் நோக்கத்திலும் இதை நாங்கள் தொடங்கப்படவில்லை. தொன்மையான நம் தமிழ்நாட்டு கோவில்களின் அவல நிலையை பார்த்து எங்களுக்குள் உருவான ஆழமான வலியையும் வேதனையும் வெளிப்படுத்துவதற்காக இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.

  நம் கோவில்கள் பெரியளவில் சிதைக்கப்பட்டு வருவதாக யுனெஸ்கோ அமைப்பே கூறியுள்ளது. இதை நிரூப்பிக்கும் விதமாக, பொதுமக்களும், ஈஷா தன்னார்வலர்களும் நூற்றுக்கணக்கான வீடியோக்களையும், புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

  தமிழ் கலாச்சாரத்தின் இதயமாகவும், பக்தியின் மையமாகவும், கலைகள், மொழி போன்றவற்றின் பிறப்பிடமாகவும் விளங்கும் கோவில்கள் இப்படி அழிந்து வருவதை பார்க்கும் போது இதயம் வலி கொள்கிறது. ஆயிரக்கணக்கான கோவில்கள் எவ்வித பராமரிப்பும் இன்றி அழிந்து வருகின்றன. எனவே, இக்கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டிய தருணமிது.

  இதற்காக நான் இன்று 100 ட்வீட்களை பதிவிட உள்ளேன். தயவுசெய்து அனைவரும் உங்கள் மதங்களை கடந்து இதற்கு ஆதரவு கொடுங்கள். இது மிகப்பெரிய அநீதி. இது இந்துக்களை பற்றியது மட்டும் அல்ல. நம் தேசத்தில் நம் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். எந்த சமூகமாக இருந்தாலும் அவர்கள் தங்கள் சமூகத்தின் சொந்த வழிபாட்டு தலங்களை அவர்களே நிர்வகிக்க வேண்டும். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாட்டு கோவில்களை அரசு பிடியில் இருந்து விடுவிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  100-க்கும் மேற்பட்ட அந்த வீடியோக்களை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக #FreeTNTemples #கோவில்அடிமைநிறுத்து ஆகிய ஹாஸ்டேக்களை பயன்படுத்தி பல்வேறு துறை பிரபலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  குறிப்பாக, கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், பிரபல பெண் தொழில் அதிபரும் பையோகான் நிறுவனத்தின் தலைவருமான கிரண் மசூம்தார், முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் ஐ.பி.எஸ், நடிகைகள் கங்கனா ரனாவத், கஸ்தூரி, ஸ்ரீதிவ்யா, ஸ்ரீநிதி ஷெட்டி (கே.ஜி.எஃப் பட நடிகை), ரவினா டன்டன், மெளனி ராய், திரெளபதி பட இயக்குநர் மோகன், பாஜகவின் தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்ட பலர் ட்விட்டரில் ஆதரவு அளித்துள்ளனர். #FreeTNTemples என்ற ஹாஸ் டேக் தமிழக அளவிலான டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.  நடிகை கஸ்தூரி தனது பதிவில், “நான் ஆன்மீக யாத்திரைகளுக்கு சென்று வருகிறேன். நம் புனித ஸ்தலங்களில் நடக்கும் இதயமற்ற சுரண்டல்களை பார்த்து என் இதயம் ரத்தம் சிந்துகிறது. மற்ற வழிப்பாட்டு தலங்களை போல் நம் கோவில்களும் விடுதலை பெற வேண்டும். சத்குரு இதற்கு குரல் கொடுத்துள்ளார். நம் நம்பிக்கைகளை மீட்க நாம் அனைவரும் ஒரே குரலில் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

  கிரிக்கெட் வீரர் சேவாக், “ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறும், மிகுந்த முக்கியத்துவமும் கொண்ட நம் கோவில்களின் தற்போதைய நிலையை பார்க்கும்போது வேதனை அளிக்கிறது. இது சரி செய்யப்படுவதோடு, முறையான நிர்வாக அமைப்பை உருவாக்கி அனைத்து இடங்களிலும் உள்ள கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க இதுவே சரியான தருணம். இந்த தேவையான முன்னெடுப்பில் சத்குருவுடன் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.  நடிகை ஸ்ரீதிவ்யா, “இது மதம் பற்றிய விஷயம் அல்ல. இது சமூகத்தின் ஒரு தரப்பினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதி, அவமரியாதை மற்றும் சமநிலையற்ற தன்மை பற்றிய விஷயம். அனைவரும் 83000 83000 என்ற எண்ணிற்கு கால் செய்து #FreeTNTemples இயக்கத்திற்கு ஆதரவு கொடுங்கள். முதலில் தமிழ்நாட்டில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால் பின்னர், நாடு முழுவதற்கும் மாற்றம் உருவாக்கிவிடலாம்” என கூறியுள்ளார்.  நடிகை கங்கனா ரனாவத், “இது இதயத்தை நொறுங்க செய்கிறது... நம் நாகரீகத்திற்கு நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம். நம் நாட்டிற்காகவும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்காகவும் எழுந்து நிற்காமல் இருப்பது அவமானமாக இருக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sheik Hanifah
  First published: