• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ’காந்தி கூறியதைத்தான் குறிப்பிட்டேன்...’ முன் ஜாமின் மனு விசாரணையில் எஸ்.வி சேகர் வாதம்

’காந்தி கூறியதைத்தான் குறிப்பிட்டேன்...’ முன் ஜாமின் மனு விசாரணையில் எஸ்.வி சேகர் வாதம்

எஸ்.வீ.சேகர்

எஸ்.வீ.சேகர்

தேசியக்கொடியை களங்கப்படுத்தியதாக தன் மீதான வழக்கில் முன் ஜாமின் கோரி எஸ்.வி சேகர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது

  • News18
  • Last Updated :
  • Share this:
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15 ம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா என்கிற வகையில் வீடியோ வெளியிட்டார்.

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் இணையவழி மூலம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் பிரிவு 2 ன் கீழ் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்ற பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்து முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலேயே தேசிய கொடியில் காவி மற்றும் பச்சை நிறம் இடம்பெற்றுள்ளதாக காந்தியடிகள் கூறியிருந்த கருத்தையே தான் தெரித்ததாக எஸ்.வி.சேகர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.



இதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு, இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதற்கு முன்னர் காந்தியடிகள் இந்த கருத்தை தெரிவித்ததாகவும், அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னர், தேசிய கொடியின் வண்ணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதரீதியான கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் எஸ்.வி.சேகர் தற்போது கருத்து தெரிவித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், தேசிய கொடியை அவமதித்ததால் ஜாமினில் வெளிவர முடியாத சட்டப்ப்பிரிவின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்த காவல்துறை, இன்று காலை விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவில் எஸ்.வி.சேகர் ஆஜராகியுள்ளதாகவும், இன்று நடத்தப்பட்ட விசாரணை நிறைவடையாததால் அவர் மீண்டும் வரும் 28-ம் தேதி ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, எஸ்.வி.சேகர் தரப்பில், சுதந்திர தினத்தன்று அறிவாலயத்தில் ஸ்டாலின் கொடி ஏற்றியபோது, தேசிய கொடிக்கு உரிய மரியாதை கொடுக்காமல் இருந்ததாக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, பழிவாங்கும் நோக்கில் தன் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளதால், அடுத்த விசாரணை வரை தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

விசாரணையின் போது எஸ்.வி.சேகர் கொடுக்கும் விளக்கத்தை பொருத்தே அவரை கைது செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, முன் ஜாமின் குறித்து பதிலமனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: