• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெண் பத்திரிகையாளர் பற்றி அவதூறு: எஸ்.வி.சேகர் எழுத படிக்கத் தெரியாதவரா - நீதிமன்றம் சுளீர் கேள்வி

பெண் பத்திரிகையாளர் பற்றி அவதூறு: எஸ்.வி.சேகர் எழுத படிக்கத் தெரியாதவரா - நீதிமன்றம் சுளீர் கேள்வி

நடிகர் எஸ்.வி.சேகர்

நடிகர் எஸ்.வி.சேகர்

சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொள்ள முடியாத எஸ்.வி.சேகர் தன்னை எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லி கொள்கிறார் என சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கேள்வி எழுப்பியுள்ளது.

  • Share this:
பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முகநூலில் வந்த தகவலை படிக்காமல் பார்வேர்ட் செய்ய எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா என கேள்வி எழுப்பியுள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதை விசாரித்த சைபர் கிரைம் பிரிவினர், எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து எஸ்.வி.சேகரை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே மறுத்துவிட்டது.

இந்நிலையில், தனக்கெதிரான இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கலிஃபோர்னியாவில் உள்ள திருமலை சடகோபன் என்பவரின் பதிவை தான் தெரியாமல் பார்வேர்ட் மட்டுமே செய்ததாகவும், பின்னர் அந்த பதிவில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் இடம் பெற்றிருந்தால் ஏப்ரல் 20-ம் தேதியே பதிவை நீக்கிவிட்டு மன்னிப்பு கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதே விவகாரம் தொடர்பான புகார்களில் அம்பத்தூர் நீதிமன்ற வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றமும், கரூர், திருநெல்வேலி நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகளை மதுரை கிளையும் ஏற்கனவே தடை விதித்துள்ளதையும் சுட்டிக்காட்டப்பட்டது. காவல்துறை தரப்பில், பெண்கள் குறித்து அவதூறாக பதிவான கருத்தை எஸ்.வி.சேகர் பதிவிடவில்லை என்றாலும், அதை பார்வேர்ட் செய்திருப்பதும் குற்றம் தான் என்பதால், அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி, முகநூலில் வந்த தகவலை படிக்காமல் பார்வேர்ட் செய்துவிட்டேன் என கூறுவதற்கு எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா என கேள்வி எழுப்பினார். சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொள்ள முடியாத இவர் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லி கொள்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.

பின்னர், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் எஸ்.வி.சேகருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய இடைக்கால தடை விதித்தும், நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16-ம் தேதி ஒத்திவைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: