Home /News /tamil-nadu /

"எஸ்பிபி இங்கு தான் உள்ளார்" : மதுரையில் ஷைலஜா, சரண் நெகிழ்ச்சி

"எஸ்பிபி இங்கு தான் உள்ளார்" : மதுரையில் ஷைலஜா, சரண் நெகிழ்ச்சி

மதுரையில் ஷைலஜா, சரண்

மதுரையில் ஷைலஜா, சரண்

எஸ்பிபி கடைசியாக பாடிய அதே இடத்தில் சனிக்கிழமை இரவு, மௌனராகம் இசைக்குழு சார்பாக "நம்ம எஸ்பிபி" என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தான் பாடியிருந்தார். அதே இடத்தில் சனிக்கிழமை இரவு, மௌனராகம் இசைக்குழு சார்பாக "நம்ம எஸ்பிபி" என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்பிபி சகோதரி ஷைலஜா மற்றும் அவரது மகன் சரண் ஆகியோர் பங்கேற்று எஸ்பிபியின் நினைவுகளையும், பாடல்களையும் பாடி மதுரை மக்களை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தினர். இதில் எஸ்பிபி அவர்களின் பாடல்கள் மட்டுமல்லாது அவர் ரசித்த, அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களை தேர்வு செய்து பாடிய போது மதுரை மக்கள் பெருத்த உற்சாகத்துடன் ரசித்து மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய சரண், "அப்பா இங்கு தான் உள்ளார். அதை நான் உணர்கிறேன். தமிழ் ரசிகர்கள் கொடுத்த ஆதரவே எஸ்பிபியை இந்த உயரத்திற்கு அழைத்து சென்றது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

ஷைலஜா பேசுகையில்,"இந்த கூட்டத்தை பார்க்கும் போது தைரியமாக உள்ளது. அதே சமயம், பயமாகவும் உள்ளது. அண்ணா இங்கு தான் உள்ளார். நாங்கள் தப்பாக பாடினால் அவர் கண்டு பிடித்து விடுவார்" என்றார்.

மேலும், எஸ்பிபிக்கு தமிழ்நாட்டில் மிகவும் பிடித்த ஊர் எது? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, எஸ்பிபி க்கு தமிழ்நாடே பிடிக்கும் என்றவர், மதுரை மக்களின் ஒவ்வொருவரின் முகத்திலும் எஸ்பிபியை பார்ப்பதாக நெகிழ்வுடன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கம்பன் ஏமாந்தான், மாங்குயிலே பூங்குயிலே, வலையோசை கல கல, ராசாவே உன்னை நான் எண்ணித்தான், ஜெர்மனியின் செந்தேன் மலரே உள்ளிட்ட பாடல்களை இருவரும் பாடினர். ஒவ்வொரு பாடலுக்கும் மதுரை அதிர கை தட்டி கொண்டாடினர் ரசிகர்கள்.

வலையோசை கல கல பாடலின் போது சரணிடம் புல்லாங்குழல் கொடுக்கப்பட்டது. அப்போது தனக்கு புல்லாங்குழல் வாசிக்கத் தெரியாது என சரண் தெரிவித்தார். குறுக்கிட்ட ஷைலஜா, எஸ்பிபி குறித்து உங்களுக்கு தெரியாத விஷயம் ஒன்று உண்டு. அது எஸ்பிபி மிக அருமையாக புல்லாங்குழல் வாசிப்பார் என்றார்.

பண்ணையாரும் பத்மினியும் படத்தில் சரண் பாடிய எனக்காக பிறந்தாயே எனதழகி என்ற பாடலை பாடினார். அதற்கு முன் பேசியவர், "இதுவரை அப்பாவின் பாடல்களையே, அவரின் குரலில் பாடிக் கொண்டிருந்தேன். மதுரையில் நிகழும் இந்த நிகழ்ச்சியில் என்னுடைய பாடல் ஒன்றையும் பாட வேண்டும் என மிகுந்த ஆசையுடன் இந்த பாடலை தேர்வு செய்தேன். இதை மதுரையில் நான் செய்யும் அரங்கேற்றம் போலவே உணர்கிறேன்" என்றார்.
இதே போல ஆனந்த கும்மி படத்தில், ஷைலஜா பாடிய ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது பாடலையும் அவர் பாடினார்.

நிகழ்ச்சியின் நடுவே சரணுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. அப்போது பேசிய மௌன ராகம் முரளி, "எஸ்பிபி அவர்களுக்கும் இப்படி பல பொன்னாடைகள் போர்த்தப்படும். அந்த பொன்னாடைகளை சாலைகளில் உடுத்த உடை இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஆளுக்கு ஒன்றாக கொடுத்து விடுவாராம். இதை எஸ்பிபி யே ஒரு கச்சேரியில் கூறினார்" என்றார். இப்படி சொன்ன உடனே தனக்கு போர்த்தப்பட்ட பொன்னாடையை அருகிலிருந்த இசைக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு போர்த்தி அழகு பார்த்தார் சரண்.

மேலும் படிக்க...தேர்தல் அறிவித்ததால் இறுதி துணை மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லை: துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்

இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட வேண்டிய மற்றுமொரு அம்சம் என்னவென்றால், அது நிகழ்ச்சிக்கு ஒலி அமைத்துக் கொடுத்த ஆடியோ இன்ஜினியர் ஆஷிக் தான். இவர்தான் எஸ்பிபி க்கு மிகவும் பிடித்த ஆடியோ இன்ஜினியர். எஸ்பிபி தமிழக கச்சேரிகள் மட்டுமல்லாது, வெளி நாடுகளுக்கும் ஆஷிக்கை அழைத்து செல்வது வழக்கம். அவரே எஸ்பிபி நினைவாக மதுரையில் நிகழ்ந்த இசை நிகழ்ச்சிக்கு ஒலி அமைத்துக் கொடுத்துள்ளார். இவர்தான் எஸ்பிபி கடைசியாக பாடிய போதும் ஒலி அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, S.P.Balasubramaniyam

அடுத்த செய்தி