உக்ரைனில் இருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் தமிழக அரசை அணுகலாம்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா ராணுவத்தை குவித்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இதற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
உக்ரைன் போர் சூழலில் உதவி தேவைப்படும் தமிழர்களுக்கு இந்தியத் தூதரகம் வழியாக விரைந்து உதவிடும்படி மாண்புமிகு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். எனவே உதவி தேவைப்படும் உக்ரைன் வாழ் தமிழர்கள் தொடர்பு கொள்க : mm.abdulla@sansad.nic.in
இதற்கிடையில் உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆணையிட்டார். உக்ரைனை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கமல்ல எங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த நடவடிக்கை அவசியம் என அவர் விளக்கம் அளித்துள்ளார். அதேவேளையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போரில் பிற நாட்டினர் யாராவது தலையிட்டால் அவர்கள் இதுவரை சந்திக்காத வரலாறு காணாத மோசமான அழிவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் விவகாரத்தில் உதவுவதற்கு தயாராக உள்ளதாக தூதரகத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தது. உக்ரைனில் இருக்கும் தமிழர்களில் பலர் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பதற்காக சென்ற கல்லூரி மாணவர்கள் ஆவர். மேலும் சிலர் வேலைக்காகவும் உக்ரைன் சென்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் உக்ரைன் நாட்டின் தலைநகர் பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என அயலக தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் அறிவித்துள்ளது. 044-28515288 /96000 23645 /99402 56444 என்ற தொலைப்பேசி எண்ணிலும் www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவிகள் கோரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.