• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை

ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை

தமிழக தேர்தல் ஆணையம்

தமிழக தேர்தல் ஆணையம்

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

  • Share this:
    தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் என்பதால், நேற்று வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது.

    திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியானது. இதனால், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    காஞ்சிபுரம் ஊரக ஒன்றிய அலுவலகத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். முன்னதாக அதிமுக பெண் வேட்பாளர்கள் 14 பேர், அங்கு உள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபாடு செய்துவிட்டு, ஆதரவாளர்களுடன் வந்து ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    விழுப்புரத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யக் குவிந்தனர். இதனால் வேட்பு மனு பெறப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கார்த்திக் என்பவர் பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நெல்லை மாவட்டம் கானார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பொறியியல் பட்டதாரியான அருள் பிரியா, தனது 16 நாள் கைகுழந்தையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரபு தனது ஆதரவாளர்களுடன் திருநாவலூர் ஒன்றிய ஊராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு திரும்பியபோது, களமருதூர் ஏரிக்கரையில் அவர்களது வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த இந்துமதி என்பவரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த ஊராட்சியில் பெரும்பான்மையாக உள்ள பழங்குடியின சமூகத்தினருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் அந்த பெண் அலுவலகத்திற்குள் அழைத்துச்செல்லப்பட்டு மனுத்தாக்கல் செய்தார்.

    Must Read : ‘டாஸ்மாக்’ மது விற்பனைக்கு ரசீது கட்டாயம் : கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை

    இந்நிலையில், புதன்கிழமை மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப்பெற வரும் 25ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: