முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கொரோனா நோயாளி என பரவிய வதந்தியால், தற்கொலை செய்துகொண்ட கூலித்தொழிலாளி

கொரோனா நோயாளி என பரவிய வதந்தியால், தற்கொலை செய்துகொண்ட கூலித்தொழிலாளி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தன்னையும் தாயாரையும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எனக் காட்டும் வீடியோக்கள் பரவியதால் நேர்ந்த துயரம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மதுரையில் கொரோனா இல்லாதவரை கொரோனா பாதிக்கப்பட்டதாக கிராமத்தினர் அலட்சியமாக வெளியிட்ட வீடியோவால் அந்த நபர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகாதவரை, கொரோனா உள்ளதாக கிராம மக்கள் வீடியோ எடுத்து பரப்பியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கொரோனா பாதிக்காதவரை அப்படி வீடியோ எடுத்து கிராம மக்கள் வெளியிட்டது ஏன்? என்ன நடந்தது மதுரையில்?

மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் 35 வயதான முஸ்தபா. இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்த இவர், ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு தமிழகம் திரும்பினார்.

மதுரை பி.பி.குளம் அருகேயுள்ள முல்லை நகரில் இருக்கும் தனது அம்மா வீட்டில் தங்கியுள்ளார். சளி, இருமல் மற்றும் சோர்வாக முஸ்தபா காணப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் எனக் கருதிய அக்கம்பக்கத்தினர் சுகாதாரத்துறை மற்றும் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சுகாதாரத் துறையினர் முல்லைநகர் வந்து விசாரணை நடத்தி முஸ்தபாவையும் அவரது தாயாரையும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஆனால், 2 மணிநேரத்திற்கு மேல் 108 ஆம்புலன்ஸ் வராததால், அந்தப் பகுதி பொது மக்களே சரக்கு வாகனம் ஒன்றைத் தயார் செய்து அவர்களை மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அப்பகுதியினர் அவர்கள் வாகனத்தில் ஏற்றப்படுவதை வீடியோவாக எடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர்.

Also read: ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா அறிகுறி இல்லை - ஈஷா மையம் விளக்கம்

இதற்கிடையே முஸ்தபாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனக் கூறி அவரையும், அவரது தாயாரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்தபோதுதான் தன்னையும் தாயாரையும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எனக் காட்டும் வீடியோக்கள் பரவியது முஸ்தபாவுக்கு தெரியவந்தது.

இதனால் மனமுடைந்த முஸ்தபா, செவ்வாய்க்கிழமை காலை மதுரையிலிருந்து நடந்து திருமங்கலம் நோக்கி சென்றுள்ளார். அப்போது, கப்பலூர் டோல்கேட் அருகே சென்றபோது சென்னையிலிருந்து நெல்லைக்கு சக்கரை மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் வருவதை கவனித்துள்ளார்.

மன வேதனையில் இருந்த அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட மதுரை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பாதிப்பு என வைரலாக பரவிய வீடியோவால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also see:

First published:

Tags: CoronaVirus, Crime | குற்றச் செய்திகள், Fake News, Suicide