சென்னை துறைமுகத்துக்குச் சொந்தமான நிரந்த முதலீட்டில் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபர்கள் 9 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மூலம் கோயம்பேடில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் 500 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது. இது நடந்து மூன்று நாட்களுக்குப் பின் கணேஷ் நடராஜன் என்பவர் இந்தியன் வங்கி கோயம்பேடு கிளையில் துறைமுக பொறுப்புக் கழகத்தின் துணை இயக்குநர் எனக்கூறி நிரந்தர வைப்புக் கணக்கில் உள்ள பணத்தில் 100 கோடி ரூபாயை இருவேறு நடப்புக் கணக்குகளில் 50 கோடி ரூபாய் வீதம் மாற்றக்கோரி சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் பரிந்துரைக் கடிதம், அனுமதிச் சான்று ஆகியவற்றை போலியாக தயார் செய்து அளித்தார்.
பின்னர் துறைமுக பொறுப்புக் கழகத்தின் பெயரில் இரு நடப்புக் கணக்குகளை இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜாவின் உதவியுடன் துவங்கிய கணேஷ் நடராஜன் தரகரான மணிமொழியுடன் சேர்ந்து ஒரு நடப்புக் கணக்கில் மாற்றப்பட்ட 50 கோடி ரூபாயை 28 வங்கிக் கணக்குகளில் தொடர்ந்து மாற்றி வந்துள்ளனர். இந்த தொடர் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த துறைமுக அதிகாரிகள் மற்றும் இந்தியன் வங்கி அதிகாரிகள் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
அப்போது மீண்டும் செல்வகுமார் என்பவருடன் பணத்தை மாற்ற வந்த மணிமொழியை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கணேஷ் நடராஜன், மணிமொழி மற்றும் சேர்மதி ராஜா ஆகிய 3 பேரும் தலைமறைவாகினர்.
இந்த விவகாரத்தில் துறைமுக பொறுப்புக் கழகமும், இந்தியன் வங்கியும் சம்மந்தப்பட்டிருப்பதால் இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் ஆறுமுகம் என்பவர் இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ-யில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா, துறைமுக அதிகாரி போல் மோசடி செய்த கணேஷ் நடராஜன் மற்றும் தரகர் மணிமொழி ஆகிய 3 பேர் மீதும் சி.பி.ஐ கடந்த ஜூலை 31 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் 100 கோடி ரூபாயில் 45 கோடி ரூபாய் வரை வெவ்வேறு வங்கிக்கணக்குகளுக்கு மணிமொழி மற்றும் கணேஷ் நடராஜன் மூலம் மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் இந்தியன் வங்கி மற்றும் துறைமுக பொறுப்புக் கழகத்தில் உள்ள யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என சி.பி.ஐ தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தரகர் மணிமொழி என்பவரது வீடு, வங்கி மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோர் தொடர்புடைய இடங்கள் மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பான இடங்கள் என சென்னை,திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் என 22 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பல்வேறு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனை அடிப்படையாக வைத்து மோசடியில் ஈடுபட்ட 9 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. துறைமுக இயக்குனர் என நாடகமாடிய கணேஷ் நடராஜன் மற்றும் தரகர் மணிமொழி, செல்வகுமார், ஜாகிர் ஹுசைன், விஜய் ஹரால்ட், செய்யது, அஃப்சார், ஆகியோரை கைது செய்து சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒன்பதாவதாக திருநெல்வேலியில் கைது செய்யப்பட்ட சுடலைமுத்து என்கிற அண்ணாச்சியை சென்னை அழைத்து வரும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்டமாக இந்த மோசடியில் துறைமுக அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் தொடர்பு உடையவர்கள் யார் யார் என விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank fraud, CBI, Crime News, Fraud