உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை உடனடியாக மீட்டு வரக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு
திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உக்ரைனில் நிலவி வரும் போர்ச் சூழலில் 5000க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டு வரக் கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதனையடுத்து, அக்கடிதத்தினை மேற்கோள் காட்டி, ஒன்றிய அரசு விரைவாக உக்ரைன் அரசுடன் தொடர்பு கொண்டு உக்ரைனிலும் சுற்றியுள்ள நாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் இந்திய மாணவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.ஆர்.எஸ். பாரதி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அக்கடிதத்தில், தமிழ்நாட்டு மாணவர்களை மீட்டு வருவதற்கு ஆகும் செலவைத் தமிழ்நாடு அரசே ஏற்கத் தயார் என முதலமைச்சர் அவர்கள் கூறியுள்ளதையும் ஒன்றிய அரசுக்கு அவர் நினைவூட்டியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக எழுதியுள்ள இக்கடிதத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களின் பாதுகாப்பு பற்றி முதலமைச்சர் மிகுந்த கவலை அடைந்திருப்பதையும்; மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்ந்து முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கோரிக்கைகள் வைத்த வண்ணம் இருப்பதையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
இச்சூழலில், உக்ரைனில் பல்வேறு இடங்களிலும் சிக்கித் தவிக்கும் மாணவர்களை விரைவாக மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களை அழைத்துவர செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?- கனிமொழி விளக்கம்
இந்நிலையில் முதற்கட்டமாக, உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் 219 பேர் ரூமேனியாவில் இருந்து ஏர்-இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர். இவர்களுள் 4 பேர் தமிழக மாணவர்கள், 22 ஆந்திர மாணவர்கள் மற்றும் 19 கேரள மாணவர்கள் அடங்குவர் என தெரிய வந்துள்ளது. மேலும் இரண்டு விமானங்களை இந்தியா அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் வாழும் தமிழர்கள் உதவிக்கு தொடர்பு கொள்ள
உதவி எண் : +91 9940256444 / +91 9600023645, 044-2851 5288
மின்னஞ்சல் : nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com
வலைதளம் :
https://nrtamils.tn.gov.in
Facebook :
https://www.facebook.com/nrtchennai1038
Twitter : @
tamiliansNRT
மத்திய வெளியுறவுத்துறை உதவி எண்கள்:
1800118797 (Toll free)
+91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905
மின்னஞ்சல்: situationroom@mea.gov.in
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.