• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரூ.62 கோடி கருப்பு பணம் மடைமாற்றமா? - டாஸ்மாக்கை உலுக்கும் புதிய ஆதாரம்

ரூ.62 கோடி கருப்பு பணம் மடைமாற்றமா? - டாஸ்மாக்கை உலுக்கும் புதிய ஆதாரம்

கருப்புப்பண விவகாரம்

கருப்புப்பண விவகாரம்

கருப்பு பணத்தை மடைமாற்ற டாஸ்மாக் வசூலை பயன்படுத்தியதாக வருமானவரித்துறை டாஸ்மாக் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.

  • Share this:
    டாஸ்மாக் வங்கி கணக்கில் சுமார் 62 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளை செலுத்திய விவகாரத்தில் 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆவணங்கள் சொல்வது என்ன.

    2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து புதிய ரூ.2000 நோட்டுக்காக மக்கள் வரிசையில் கால்கடுக்க நின்றனர். அந்த காலகட்டத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் மதுபானம் விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனம் சட்டவிரோதமாக சுமார் ரூ.62 கோடி ரூபாய் செல்லா நோட்டுகளை வசூலித்து வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே, செல்லாத நோட்டுக்களை வாங்க வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து கடை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினர். அந்த சுற்றறிக்கையில், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாடிக்கையாளர்களிடம் பெறுவது சட்டவிரோதம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால், அந்த மாதம் செய்யப்பட்ட வசூலில் ரூ.62 கோடி செல்லாத நோட்டுகளை அந்தந்த மாவட்ட வங்கி கணக்குகளில் மேலாளர்கள் செலுத்தினர்.

    இந்த விவகாரத்தை மோப்பம் பிடித்த வருமானவரித்துறை அதிகாரிகள், இது தொடர்பாக ஆவணங்களை வரவைத்து விசாரணை மேற்கொண்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், செல்லாத நோட்டுக்களை வாங்கியதாக டாஸ்மாக் நிர்வாகம் சொன்ன விளக்கத்தை வருமானவரித்துறை ஏற்கவில்லை.ஏனென்றால், டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளில் செல்லாத நோட்டுகளை வசூலித்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்கிறது வருமானவரித்துறை.



    சட்டவிரோதமாக செல்லாத நோட்டுக்களை வசூலித்த அதிகாரிகள் மீது 5 ஆண்டுகளாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

    அதிகபட்சமாக ஈரோட்டில் ரூ.22.64 கோடி, குமரி, கடலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ரூ.4 கோடி மதிப்புள்ள பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகள் வசூலிக்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. கருப்பு பணத்தை மடைமாற்ற டாஸ்மாக் வசூலை பயன்படுத்தியதாக வருமானவரித்துறை டாஸ்மாக் நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.

    அதே காலகட்டத்தில், பணமற்ற விவகாரத்தில் அரசு ஒப்பந்ததரர் சேகர் ரெட்டி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்கள் இதேபோன்ற ஒரு வழக்கில் சிக்கினர். சேகர் ரெட்டி உள்ளிட்டவர்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை நடவடிக்கை பாய்ந்த நிலையில், டாஸ்மாக் அதிகாரிகள் மீது பாயாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கறுப்பு பணப் பரிமாற்றம் நடந்தது குறித்து விசாரணை நடப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.இந்த குற்றசாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டபோது, விரைவில் விளக்கம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.இந்த விவாகரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக செய்தி தொடர்பாளர் சரவணன், இதில் தமிழக அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: