செம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

செம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

முதலமைச்சர் பழனிசாமி

மேற்குத்தாம்பரம், வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க 71 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

  நிவர் புயலின் போது ஏற்பட்ட கனமழை காரணமாக செம்மஞ்சேரியில் சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், செம்மஞ்சேரி அருகே உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி, ஒக்கியமேடு, முட்டுக்காடு முகத்துவாரம் ஆகிய இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

  அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்டார். செம்மஞ்சேரியில் மழை நீர் தேங்குவதை தடுக்க 583 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.

  மேற்குத்தாம்பரம், வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க 71 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்தார். தாழ்வான இடங்களான மடிப்பாக்கம், ராம்நகர், வேளச்சேரி பகுதிகளில் 2004ம் ஆண்டுக்கு முன்பு வரை 20 சதவீத வீடுகளே இருந்ததாகவும், தற்போது 80 சதவீதமாக வீடுகள் அதிகரித்துள்ளதாகவும் கூறிய முதலமைச்சர், இதன்காரணமாகவே மழை காரணங்களில் பாதிப்பு ஏற்படுவதாகவும் விளக்கமளித்தார்.

  மழைநீர் கடலில் சென்று கலக்க ஏதுவாக முட்டுக்காடு முகத்துவாரப்பகுதியை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், செம்பரம்பாக்கம் ஏரி பராமரிப்பின்றி மழை நீர் வீணானதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் முன்வைத்த குற்றச்சாட்டையும் மறுத்தார்.

  எதிர்க்கட்சிகள் நல்ல ஆக்கப்பூர்வமான ஆலோசனை அளித்தால் அரசு கேட்கும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின், வீட்டில் இருந்து மக்களை பார்க்காமல், வெளியே வந்து பார்த்தால் என்ன திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்பது அவருக்கு தெரிய வரும் எனவும் கூறினார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: