நெல்லையில் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை மீது புகார்

Youtube Video

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை, தன்னிடம் இருந்து வாங்கிய 40 லட்சம் ரூபாயைத் திருப்பித் தரவில்லை என ஓய்வுபெற்ற அரசு அதிகாரி நெல்லை சரக டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார்.

 • Share this:
  அவசரச் செலவுக்கு 40 லட்சம் ரூபாய் கடனாக வாங்கிய எம்எல்ஏ இன்பதுரை 2 ஆண்டுகளாகியும் அதைத் திருப்பித் தரமறுப்பதோடு கொலை மிரட்டலும் விடுப்பதாகக் கூறி புகாரளித்துள்ளார் டிவி மணி. புகார் குறித்த எம்எல்ஏ அளித்த விளக்கம் என்ன? பணம் வாங்கியது உண்மையா?

  நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் டி.வி.மணி. இவர் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினியிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் அதிமுக எம்எல்ஏ இன்பதுரையும் தானும் நீண்ட கால நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அடிப்படையில் 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 22ம் தேதி இன்பதுரை தன்னிடம் 40 லட்சம் ரூபாய் கடனாக கேட்டதாக தெரிவித்துள்ளார்.

  பணத்தை இன்பதுரையின், சென்னை உயர்நீதிமன்ற இந்தியன் வங்கிக் கிளை கணக்கில், தனது மகன் வங்கிக் கணக்கு மூலம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். பணத்தைத் திருப்பிக் கேட்டபோது இன்பதுரை தரவில்லை என்றும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் புகாரில் கூறியுள்ளார்.

  மேலும், தொலைபேசி மூலமாகவும் அவரது ஆட்களை வைத்தும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதனால் நெல்லை சரக டிஐஜியிடம் புகார் அளித்துள்ளதாகவும் டிவி மணி தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க... தவறவிட்ட கைப்பையில் 30 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கம்: உரியவரிடம் ஒப்படைத்த சலவை தொழிலாளிக்கு பாராட்டு

  இதுகுறித்து எம்எல்ஏ இன்பதுரை அளித்துள்ள விளக்கத்தில், தான் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் தனது சக வழக்கறிஞரான ராம்பிரசாத் என்பவருக்கும் புகாரளித்த மணியின் மகன் ராஜு என்பவருக்குமான பிரச்னையில் இந்த விவகாரத்தைக் கிளப்பி விட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

  தேர்தல் நேரத்தில் இந்தப் பிரச்னையைக் கிளப்பி விட்டால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் என்ற உள்நோக்கத்தோடு ஒரு அரசியல் பிரமுகர் இதன் பின்னணியில் இருந்து செயல்படுவதாகவும் இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

   

  சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ராதாபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட இன்பதுரை தயாராகி வரும் நிலையில், தன் மீதான இந்தப் புகாரை சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: