Home /News /tamil-nadu /

Exclusive: ரூ.2000 கோடி கடன் சுமையில் மதுரை போக்குவரத்து கோட்டம் - எப்படி சமாளிக்க போகிறது அரசு?

Exclusive: ரூ.2000 கோடி கடன் சுமையில் மதுரை போக்குவரத்து கோட்டம் - எப்படி சமாளிக்க போகிறது அரசு?

ரூ.2000 கோடி கடன் சுமையில் மதுரை போக்குவரத்து கோட்டம் - எப்படி சமாளிக்க போகிறது அரசு?

ரூ.2000 கோடி கடன் சுமையில் மதுரை போக்குவரத்து கோட்டம் - எப்படி சமாளிக்க போகிறது அரசு?

மதுரை கோட்ட போக்குவரத்து கழகத்துக்கு ரூ.68 லட்சம் வாடகை பாக்கி இருப்பதும், தினமும் ரூ.78 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுவதும், ரூ.2,178 கோடி கடன் சுமை இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் மட்டும் ரூ.2,178 கோடி ரூபாய் கடன் நிலுவை இருப்பதும், அதனால் மதுரை கோட்டம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.

மதுரை கோட்டம் என்பது மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கியது. இங்கு மொத்தமாக 2500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 2 கோடி ரூபாயும், மாதத்திற்கு 65 முதல் 70 கோடி ரூபாய் வரையும் வருவாய் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த மதுரை கோட்ட போக்குவரத்து கழகத்தின் நிதி நிலமை குறித்து சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பெறப்பட்ட பதில்கள் மூலம் ரூ.68 லட்சம் வாடகை பாக்கி இருப்பதும், தினமும் ரூ.78 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுவதும், ரூ.2,178 கோடி கடன் சுமை இருப்பதும் தெரிய வந்துள்ளது.

நிதி நெருக்கடிக்கான காரணங்கள் :

1. வாடகை பாக்கி ரூ.68 லட்சம்

மதுரை அரசு போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில் தெற்கு ஆர்.டி.ஓ (வட்டார போக்குவரத்து அலுவலகம்) அலுவலகத்திற்கு வாடகைக்கு விடப்பட்டு உள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை, தெற்கு ஆர்.டி.ஓ அலுவலகம் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.77 லட்சத்து 81 ஆயிரத்து 488 ரூபாய் வாடகை செலுத்த வேண்டும்.

இதில், ரூ.68 லட்சத்து 66 ஆயிரத்து 744 ரூபாய் வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது.

2. தினமும் ரூ.78 லட்சம் வருவாய் இழப்பு

மதுரை கோட்டத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவையால் நாளொன்றுக்கு சராசரியாக 4.89 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.

இதனால், நாளொன்றுக்கு ரூ.78 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

2021 டிசம்பர், 2022 ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் மட்டும் 4 கோடியே 20 லட்சம் பேர் பயன்படுத்தி உள்ளனர்.

இதனால், அந்த 3 மாதங்களில் மொத்தம் ரூ.67 கோடியே 37 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

3. கடன் நிலுவை ரூ.2,178 கோடி

மதுரை அரசு போக்குவரத்து கழகம் 2011-12 ஆம் நிதியாண்டில் ரூ.135 கோடியே 34 லட்சம் ரூபாய் கடன் பெற்று அதற்காக ரூ.5 கோடியே 19 லட்சம் வட்டி கட்டிய நிலையில், கடன் பெறும் அளவு ஆண்டு தோறும் அதிகரித்து 2020-21 ஆம் நிதி ஆண்டில் மட்டும் ரூ.985 கோடியே 55 லட்சம் ரூபாய் கடன் பெற்று, அதற்காக ரூ.63 கோடியே 91 லட்சம் ரூபாயை வட்டியாக செலுத்தி உள்ளது.

மொத்தமாக இது வரைக்கும் ரூ.2,178 கோடியே 29 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய கடன் தொகை நிலுவையில் உள்ளது.

இவை குறித்து மதுரை கோட்ட உயரதிகாரிகள் அளித்த விளக்கம்:

1. மாதம் ரூ.11,264-க்கு வாடகைக்கு விடப்பட்டிருந்த தெற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ரூ.1,15,000-ஆக வாடகை உயர்த்தப்பட்டது.

உயர்த்திய வாடகையை கொடுக்க இயலாது என ஆர்.டி.ஓ அலுவலகம் தெரிவித்து, அது தொடர்பான அலுவல் ரீதியான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதால் ரூ.68 லட்சத்து 66 ஆயிரத்து 744 ரூபாய் வாடகை பாக்கி வசூலாகாமல் உள்ளது.

2. பெண்களுக்கான இலவச பேருந்து சேவை திட்டத்தின் மூலம் சராசரியாக 5 லட்சம் பெண்கள் பயணிக்கும் நிலையில், ஒரு டிக்கெட்டுக்கு 14 ரூபாய் வீதம் மானியமாக மாதம் தோறும் 60 கோடி ரூபாயை போக்குவரத்து கழகத்திற்கு கொடுக்கிறது அரசு.

அந்த 60 கோடி ரூபாய் மூலம், வருவாய் இழப்பை ஈடுகட்டுதல், ஊழியர்களுக்கு சம்பளம் அளித்தல், ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் கொடுத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



3. மதுரை கோட்டத்தில் மாதத்திற்கு 65-70 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தாலும், அதில் சுமார் 55 கோடி ரூபாய் டீசல் செலவுக்கும், மீதமுள்ள பணம் பேருந்து பராமரிப்பு உள்ளிட்ட செலவுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2000- ஆம் ஆண்டிற்கு பின்னர் உயர்ந்த டீசல் உள்ளிட்ட விலைவாசி உயர்வுகளை ஈடுகட்டும் அளவுக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை.

மேலும், பணியாளர்களுக்கான ஊதிய உயர்வுகளின் காரணமாகவும் இவ்வளவு கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு செய்ய வேண்டியது என்ன :

தமிழகத்தில் 8 போக்குவரத்து கோட்டங்கள் உள்ள நிலையில், மதுரை கோட்டத்தில் மட்டுமே 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதும், அது கடும் நிதி நெருக்கடியிலும் சிக்கித் திணறிக்கொண்டிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மதுரை கோட்டத்தில் மட்டும் இவ்வளவு நெருக்கடி எனில் பிற கோட்டங்களின் நிலையை சிந்தித்துப் பார்த்தால் மக்கள் பெரும் பதபதைப்புக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது.

தமிழகத்தின் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் போக்குவரத்து தேவையை தீர்க்கும் பிரதான பணியை செய்பனவே இந்த போக்குவரத்து கழகங்கள். இவைகள் இவ்வளவு நிதி நெருக்கடியில் நீடிப்பது என்பது பேருந்துகளின் தரத்தை தாழ்த்துவதோடு மட்டுமல்லாமல், மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் அபாயத்தையும் கொண்டிருக்கிறது.

தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தி, நிதி நெருக்கடிக்கான மறைமுகமான மற்றும் உண்மையான காரணங்களை ஆய்வு செய்து, போக்குவரத்து கழகங்களின் வருவாயை உயர்த்தவும், நிதி நெருக்கடியை சீரமைக்கவும் வேண்டிய வழிமுறைகளை செய்து மக்களின் பயணப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Published by:Esakki Raja
First published:

Tags: Govt Bus, Madurai, Transport ministry

அடுத்த செய்தி