குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம்... வதந்திகளை நம்பி ஏமாறும் ரேஷன் அட்டைத்தாரர்கள்

ரேஷன் கடை

PHH மற்றும் PHH-AAY என்ற இரு வகையான ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளுக்கு மட்டுமே உரிமைத்தொகை வழங்கப்படும் என சில வதந்திகள் பரவி வருகின்றன.

 • Share this:
  குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம் தொடர்பான வதந்திகளை நம்பி, தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் குடும்ப அட்டைகளில் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.

  தமிழகத்தில் 5 வகையான ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்படும் நிலையில், இதில் பெரும்பாலானவற்றில் குடும்பத் தலைவர் எனும் இடத்தில், ஆண்களின் புகைப்படங்களே இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி, குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

  இந்நிலையில் PHH மற்றும் PHH-AAY என்ற இரு வகையான ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளும் மற்றும் குடும்பத் தலைவராக பெண்ணின் புகைப்படம் இருந்தால் மட்டுமே, உரிமைத்தொகை வழங்கப்படும் என சில வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அவற்றை நம்பி, தூத்துக்குடியில் கடந்த ஒரு மாதத்தில் 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர், ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளனர்.

  Also Read : ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

  இதற்காக, வட்டார வழங்கல் அலுவலர் அலுவலகம் மட்டுமின்றி இ-சேவை மையங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். குடும்பத் தலைவரின் புகைப்படம் மட்டுமின்றி, ரேஷன் அட்டைகளின் வகைகளை மாற்றவும், பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  இந்த சூழலை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் ஆயிரக் கணக்கில் பொதுமக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குடும்பத் தலைவரின் புகைப்படத்தை நீக்கிவிட்டால், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் உள்ளிட்ட பிற ஆவணங்களை பெற முயலும்போது, சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது குறித்து இ-சேவை மையத்தினர் கூறும்போது பொதுமக்கள் அனைத்து அரசு உதவிகையும் பெற்றுவிட முயற்சிப்பதாக தெரிவிக்கின்றனர்.

  Also Read : 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டை பெறலாம்... என்னென்ன ஆவணங்கள் தேவை!

  இது குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, முறையான அறிவிப்பு வெளியாகாத நிலையில், வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். அதேசமயம், குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் தொடர்பாக ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, அரசு முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: