• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இளநீர் வியாபரம்: 9 முறை குண்டர் தடுப்புச் சட்டம் - போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட அயனாவரம் சங்கரின் கதை

இளநீர் வியாபரம்: 9 முறை குண்டர் தடுப்புச் சட்டம் - போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட அயனாவரம் சங்கரின் கதை

ரவுடி சங்கர்

ரவுடி சங்கர்

சென்னையில் காவல்துறை என்கவுன்டரில் கொல்லப்பட்ட சங்கரின் உடல் நாளை பிரேதபரிசோதனை செய்யப்படுகிறது. இளநீர் வியாபாரத்திலிருந்து சங்கர் ரவுடியான கதையைப் பார்க்கலாம்.

  • Share this:
சென்னை அயனாவரம் கே.கே நகர் 2 வது தெருவைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான சங்கர்(48). இவரது தாய் இளநீர் கடை வைத்துள்ளதாலும், 1995 ம் ஆண்டுக்கு முன் சங்கர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதற்கு முன் அவ்வபோது தாய் நடத்தி வந்த இளநீர் கடையில் வேலை செய்துள்ளார்.

இதனால் ரவுடிகள் மத்தியில் இவருக்கு இளநீர் சங்கர் என்ற அடைமொழியும், சென்னை போலீஸ் மத்தியில் அயனாவரம் சங்கர் என்ற அடைமொழியும் உள்ளது.

தற்போது வரை திருமணமாகாத இவர் மீது 1996 ம் ஆண்டு அயனாவரம் காவல் நிலையத்தில் பெட்டி கேஸ் வழக்கு பதிவாகிறது. அதன்பின் சங்கர் தொடர்ச்சியாக அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். 1998 ஆம் ஆண்டு அயனாவரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி சிறை சென்றார்.

சிகிச்சைப் பெறும் காவலர்


சிறை சென்று வெளியே வந்த சங்கர், அதன்பின் கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்துதல், கட்டப்பஞ்சாயத்து, கொலை மிரட்டல் கொடுத்தல் ஆகியவற்றையே தனது தொழிலாக மாற்றி வடசென்னையின் முக்கிய ரவுடி லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.

சென்னையில் இன்று என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி சங்கர் யார்...? பழைய குற்ற வழக்குகள் என்ன...?


அதன் பின் தொடர்ச்சியாக 4 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 51 வழக்குகள் சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் சங்கர் மீது பதிவாகியுள்ளன. இதில் 31 வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன. குறிப்பாக சங்கர் மீது 9 முறை குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. பாதிநாள் சிறையிலும், மீதிநாள் வெளியிலும் என இருந்த சங்கர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்துதல், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி போன்றவற்றை தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் கஞ்சா நடமாட்டத்தை குறைப்பதற்காக கடந்த மாதம் முதல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த அதிரடி சோதனையில் சென்னை முழுவதும் 111 நபர்களை ஜூலை மாதம் 6 தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வரை கைது செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக வடசென்னையில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாகவும், இளநீர் சங்கர், கஞ்சா நடமாட்டத்துக்கு முக்கிய காரணம் எனவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையில் நான்கு காவலர்கள் நேற்றிரவு ரவுடி சங்கரை கைது செய்தனர்.

சங்கரிடம் விசாரணை மேற்கொண்டபோது கஞ்சாவை நியூ ஆவடி சாலையில் ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருப்பதாக விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். அதனை பறிமுதல் செய்வதற்காக இன்று அதிகாலை நடராஜ் உட்பட 5 போலீஸார், ரவுடி சங்கரை அழைத்து நியூ ஆவடி சாலையில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு அருகே அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு விசாரணை போது ரவுடி சங்கர் தனது இடத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் முபாரக்கை  வெட்டியுள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் நடராஜ், காவலர் முபாரக்கை காப்பாற்றுவதற்காக துப்பாக்கியால் மூன்று முறை ரவுடி சங்கரை சுட்டுள்ளார்.


இதில் படுகாயமடைந்த ரவுடி சங்கரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் சங்கரின் தாக்குதலில் படுகாயமடைந்த காவலர் முபாரக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேஜிஸ்ட்ரேட் சிவ சக்திவேல் கண்ணன் முன்னிலையில் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்ட சங்கரின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: