தனது குழந்தை நண்பர் சாயலில் இருந்ததாக கூறி தாக்குதல்.. ரவுடி படுகொலை... சென்னையில் பயங்கரம்

கைது செய்யப்பட்டவர்கள்

சென்னையில் முன்னாள் நண்பரின் சாயலில் தனது குழந்தையின் முகம் இருப்பதாகக் கூறி பட்டப்பகலில் ரவுடியை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

  • Share this:
சென்னை அயோத்திக் குப்பம் பகுதியைச் சேர்ந்த கிளி ராஜேஷ்(27), ஜான்சன் மற்றும் அவர்களது கூட்டாளிகள் நான்கு பேர் சேர்ந்து சிலரை கொலை செய்யும் நோக்கோடு பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் கடந்த மாதம் 22 ம் தேதி மெரினா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியில் வந்த நிலையில் ரவுடிகள் கிளி ராஜேஷ், ஜான்சன் இருவரும் தினம்தோறும் மெரினா காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி ரவுடிகள் கிளி ராஜேஷ், ஜான்சன் இருவரும் மெரினா காவல் நிலையத்தில் இன்று காலை 11 மணியளவில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

பின்னர் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வீட்டிற்குச் செல்லும் வழியில் விவேகானந்தர் இல்லம் பின்புறம் 7 பேர் கொண்ட கும்பலால் சுற்றிவளைக்கப்பட்டு பயங்கர ஆயுதங்களுடன் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கிளி ராஜேஷ் உயிரிழந்தார்.

மற்றொரு நபரான ஜான்சன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மெரினா காவல் நிலைய போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அயோத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் அவருடைய கூட்டாளிகள் 6 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ஏழுமலை, வீரா, லோகேஷ்(எ) ராஜேஷ் கண்ணா, காட்டான்(எ) காத்தவராயன், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 5 நபர்களிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் ஏழுமலையும் ஜான்சனும் மெரினா, அயோத்திக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர் என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் ஏழுமலையின் மனைவிக்கும் அவரது நண்பரான ஜான்சனுக்குமிடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக ஏழுமலைக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதனால் ஏழுமலை, அவரது மனைவி, ஜான்சன் ஆகியோருக்குள் சண்டை எழுந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஏழுமலை மற்றும் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை ஜான்சனின் முக சாயலில் இருப்பதாகவும், அது தனக்குப் பிறந்த குழந்தை அல்ல எனவும் ஏழுமலை அவரது மனைவியுடன் கடந்த சில மாதங்களாக சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்தப் பிரச்சினை பெரிதாகவே ஏழுமலையைக் கொலை செய்வதற்காக கடந்த மாதம் ஜான்சன் மற்றும் அவரது நண்பர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி செய்ததும், அதனால் ஜான்சன், கிளி ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மெரினா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றதும் தெரியவந்தது.

இந்த நிலையில்தான் ஜான்சன் மற்றும் அவரது நண்பர் கிளி ராஜேஷ் உட்பட அனைவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த தகவலை அறிந்த ஏழுமலை இனி ஜான்சன் உயிருடன் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இந்த நிலையில் இன்று காலை ஜான்சன் மற்றும் அவரது நண்பர் கிளி ராஜேஷ் ஆகியோர் நிபந்தனையின் பேரில் கையெழுத்து போடுவதற்காக மெரினா காவல் நிலையம் வந்து பின் வீடு திரும்பும்போது ஏழுமலை மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மீதும் கொடூரமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.

மேலும், கொலை செய்யப்பட்ட கிளி ராஜேஷ் மீது கண்ணகி நகர், மெரினா காவல் நிலையங்கள் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி வழக்குகள், அடிதடி வழக்குகள், கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அதே போல சிகிச்சை பெற்றுவரும் ஜான்சன் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளன.

strong>Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சம்பவம் குறித்து மெரினா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தலைமறைவாக உள்ள மற்ற கொலையாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும், கடந்த மாதம் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் கிளி ராஜேஷ், ஜான்சன், கமல் (எ)கமல் பாஷா உட்பட அவரது நண்பர்கள் மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்ட போது அங்கு திடீர் உடல் நலக்குறைவால் கமல்(எ) கமல் பாஷா உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Karthick S
First published: