ரவுடி பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே பினு தான் நினைவுக்கு வருவார். 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது பிறந்தநாள் கொண்டாடட்டத்தின் போது அரிவாளால் கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் பினு. ஒரே வாரத்தில் போலீசாரிடம் சிக்கிய அவர், நான் அப்படி ஒன்றும் பெரிய ரவுடி அல்ல என அழுது கொண்டே வெளியிட்ட வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியது. பினுவின் வரிசையில் தற்போது இன்னொரு ரவுடி சேர்ந்திருக்கிறார்.
சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் 34 வயதான முட்டை என்ற அசாருதீன். இவர் மீது அழகாபுரம், பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அழகு நிலையங்களில் பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. இது தவிர சேலம் அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, அழகாபுரம், பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி அவரது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்தனர். ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள பிரதான சாலையில் ஓரிடத்தில் அவருக்கு மாலை போட்டு மலர்க் கிரீடம் அணிவித்து ஆடல் பாடலுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். அதை ட்ரோன் மூலம் வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.
இளைஞர்கள் அசாருதீன் பற்றி கானா பாடல் பாடிய போது, அவர் மீது கை வைத்தால் தலையை துண்டித்து கையில் தொங்க விடுவோம் என்று பாடிய காட்சியும் சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் பிறந்தநாள் விருந்தாக சொகுசு பங்களா ஒன்றில் நண்பர்களுக்கு மதுவிருந்து கொடுத்து அவர்களிடையே பேசிய காட்சியும் வெளியாகியுள்ளது.
அசாருதினீன் வீடியோக்களைப் பார்த்த கன்னங்குறிச்சி போலீசார் உடனடியாக அவரைக் கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்தவர்களையும் தேடி வருகின்றனர். வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில், ரவுடி அசாருதீனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் சமயத்தில் மக்களை மிரட்டும் வகையில் இடம்பெற்ற கானா பாடலும் பார்ப்பவர்களை மிரளவைக்கும் பிறந்தநாள் கொண்டாட்டமும் ரவுடியை சிறையில் தள்ளிய சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.