• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • சிவகங்கையில் தீரன் படப்பாணியில் கொள்ளை.. ராணுவ வீரரின் தாய், மனைவியை கொடூரமாக அடித்துக் கொன்ற கும்பல்..

சிவகங்கையில் தீரன் படப்பாணியில் கொள்ளை.. ராணுவ வீரரின் தாய், மனைவியை கொடூரமாக அடித்துக் கொன்ற கும்பல்..

Youtube Video

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் ராணுவ வீரரின் தாய், மனைவியை தீரன் படம் பாணியில் கொன்றுவிட்டு, 80 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

 • Share this:
  லடாக் எல்லையில் நாட்டை காக்க போராடிக் கொண்டிருக்கும் ராணுவ வீரரின் தாய், மனைவியை கொடூரமாக அடித்துக் கொன்றுவிட்டு கொள்ளை சம்பவத்தை ஒரு கும்பல் அரங்கேற்றியுள்ளது. ராணுவ வீரரின் வீட்டை குறிவைத்து கொலை, கொள்ளையில் ஈடுபட்ட கொடூரக் குற்றவாளிகள் யார்?

  சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடுக்கூரணி கிராமத்தில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சந்தியாகு. இவரது மனைவி ராஜகுமாரி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஸ்டீபன் லடாக் எல்லையில் ராணுவ வீரராக பணிபுரிகிறார். இளைய மகன் ஜேம்ஸ் ராஜா, உத்தரபிரதேசத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். சந்தியாகுவின் குடும்பமே ராணுவ குடும்பம் என்று அந்த ஊரினரால் அழைக்கப்படுகிறது.

  முடுக்கூரணி கிராமத்தில் தனியாக தோட்டத்திற்குள் உள்ள வீட்டில் சந்தியாகு, அவரது மனைவி ராஜேஸ்வரி, மூத்த மகன் ஸ்டீபனின் மனைவி சினேகா, அவரின் 8 மாத கைக்குழந்தை வசித்து வந்தனர்.

  இளைய மகன் ஜேம்ஸ் ராஜாவின் குடும்பத்தினர் காரைக்குடியில் வசித்து வருகின்றன. வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தோட்டத்தில் திங்கட்கிழமை இரவு வேலை நடந்ததால், சந்தியாகு அங்கு சென்றுவிட்டார். வீட்டில் சந்தியாகுவின் மனைவி, மருமகள், கைக் குழந்தை இருந்தனர். அதிகாலை குழந்தை அலறல் சத்தம் கேட்டு, சந்தியாகு வீட்டு வழியாக தோட்ட வேலைக்கு சென்றவர்கள் போய் பார்த்துள்ளனர்.

  அப்போது ரத்த வெள்ளத்தில் மாமியார் ராஜகுமாரி, மருமகள் சினேகா இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். குழந்தையை மீட்டவர்கள் சந்தியாகுவிற்கும், காளையார்கோவில் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர்.

  மோப்பநாய் கிராமத்திற்குள்ளேயே சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றுவிட்டது. சம்பவ இடத்திற்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு வகிக்கும் வருண்குமார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

  முதல் கட்ட விசாரணையில், இரவில் தோட்டத்தில் சந்தியாகு வேலை பார்ப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். வீட்டுக்குச் சென்று மாமியார், மருமகளை சரமாரியாக கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

  வீட்டில் இருந்த 80 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்கின்றனர் போலீசார். இதை தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க மானாமதுரை டிஎஸ்பி ராஜேஷ், சிவகங்கை டிஎஸ்பி அப்துல் காதர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

  அக்கம்பக்கம் சிசிடிவி எதுவும் இல்லாததால் கொலையாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊருக்குள் புதிய நபர்கள் யாரும் வந்தார்களா? சந்தியாகு வீட்டில் நகை இருந்தது கொள்ளையர்களுக்கு எப்படி தெரிந்தது? நகை, பணத்திற்காகத்தான் இந்த கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த ஸ்டீபன் தம்பி ஜேம்ஸ் ராஜா, தகலறிந்து காரைக்குடியில் இருந்து முடுக்கூரணி கிராமத்திற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் குடும்பமே நாட்டைக் காக்க எல்லையில் போராடி வருவதாகவும், ஆனால் தனது வீட்டை காக்க இங்கு யாரும் இல்லாமல் போனது வருத்தமளிப்பதாகக் கூறினார். ராணுவ வீரரின் வீட்டில் நடந்த இந்த கொடூர கொலை, கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகள் சிக்குவார்களா?


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: