காலையில் டிப்டாப்.. இரவில் டவுசர் திருடர்கள்.. போலீசிடம் சிக்கிய கும்பல்..

Youtube Video

விழுப்புரம் மாவட்டத்தில், வடிவேலு படத்தில் வரும் காட்சியை போன்று, பக்கத்து வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு, குறிவைத்து குறிப்பிட்ட வீடுகளில் கொள்ளையடிது கலக்கி வந்த பிரபல கொள்ளை கும்பலை போலீசார் பிடித்துள்ளனர் கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி?

 • Share this:


  வடிவேலு படத்தில் வரும் காட்சியை போன்று பக்கத்து வீடுகளை பூட்டி விட்டு துணிகரமாக கொள்ளையில் ஈடுப்பட்ட கும்பலை, கைவரிசை காட்டிய இடத்தில் வைத்தே போலீசார் கைது செய்துள்ளனர். டிரவுசர் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

  விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டின் பின் கதவை உடைத்து தங்க நகைகள் திருடும் சம்பவம் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் சசிகுமார் என்பவரின் வீட்டின் பின் கதவை உடைத்த மர்ம நபர்கள் சசிகுமாரின் தாயார் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் அவர் வீட்டில் இருந்த சுமார் 39 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர்.

  தொடர் புகார்கள் வந்ததையடுத்து ஆரோவில் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடிவந்தனர். மேலும் சாலைகள் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.

  இந்த கொள்ளை கும்பல் புதுவிதமாக கொள்ளையடிக்க செல்லும் முன் பக்கத்து வீட்டின் கதவுகளை பூட்டு போட்டு விட்டு கொள்ளையை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது. அதனால் ஒரே கும்பல்தான் அந்த பகுதியில் கைவரிசை காட்டியது உறுதி செய்யப்பட்டது.

  இந்நிலையில் ஆரோவில் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற இருவரை ரோந்து போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

  பிடிபட்டவர்கள் புதுச்சேரியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தாய்மாமன் வேலூரை சேர்ந்த ஆறுமுகம் என்று தெரியவந்தது. அவர்கள்தான் கடந்த இரண்டு மாதங்களாக ஆரோவில் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்திருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

  நண்பர்களான இருவரும் ஒன்று சேர்ந்து கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். பாலகிருஷ்ணன் பகலில் டிப் டாப் உடையில் திருட போகும் இடத்தை நோட்டம் விட்டு அருகில் இருக்கும் டீ கடையில் உள்ள மக்களிடம் பேசி பகுதி நிலவரங்களை தெரிந்து கொள்வார்.

  இரவு நேரத்தில் நண்பர்கள் இருவரும் டவுசர் மற்றும் முகமூடி அணிந்து கொண்டு நோட்டம்விட்ட வீடுகளில் கைவரிசையை காட்டியுள்ளனர். வீட்டில் இருக்கும் பெண்களின் கழுத்தில் உள்ள சங்கிலிகளை பறிக்கும் போது மாட்டிவிட கூடாது என்பதற்காக பக்கத்து வீட்டு கதவுகளை பூட்டை போட்டு பூட்டியதாக திருடர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

  மேலும் படிக்க...சிறுமி மீது கொண்ட ஆசையால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்..

  அவர்களிடமிருந்து சுமார் 50 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் ஏற்கனவே தமிழகம் மற்றும் பெங்களூர் பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு சிறையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிட்டதக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: