30 ஆண்டுக்கால கோரிக்கை நிறைவேற்றம்...100 சதவீதம் வாக்களிக்க காத்திருக்கும் மலைக் கிராம மக்கள்

கோப்புப் படம்

தார் சாலை அமைத்துத்தர வலியுறுத்தி 30 ஆண்டுகளாக போராடி வந்த மலைகிராம மக்கள், தங்கள் கோரிக்கை நிறைவேறியதால், 100 சதவீதம் வாக்களிக்க போவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் இருக்கிறது ஏக்கல்நத்தம் என்ற மலைகிராமம். தரைமட்டத்தில் இருந்து சுமார் நான்கரை கிலோ மீட்டர் தொலைவில் மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில். சுமார் 250 குடும்பத்தினர் எந்த வித அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்த கிராமத்தில் சாலை வசதி இல்லததால் பிரசவம் உள்ளிட்ட மருத்துவ தேவைக்கு கட்டிலில் படுக்க வைத்து தூக்கி செல்ல வேண்டிய அவலநிலை நிலவி வந்தது. இதனால் தங்களுக்கு சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி வந்தனர்.

  குறிப்பாக 700 வாக்காளர்களை கொண்ட இந்த கிராமத்தில் அடிப்படை வசதி கோரி வாக்காளர் அட்டையை ஒப்படைப்பது, தர்ணா, உண்ணாவிரதம் என போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முழுமையாக புறக்கணித்தனர்.

  இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதி மற்றும், சமூக பொருளாதார வளர்ச்சி நிதியியிலிருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆங்காங்கே சிமெண்ட் தடுப்பு சுவர், மழை நீர் செல்லும் பாதைகள் அமைத்து பணிகள் நிறைவேற்றபட்டு தற்போது தார் சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

  30 ஆண்டு கனவு தற்போது நிறைவேறியுள்ளதால் மலைகிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசு தங்களுக்காக முயற்சி எடுத்து பல கோடி நிதி செலவிட்டு சாலை வசதியை ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த முறை தேர்தலை புறக்கணித்த நிலையில், இந்த முறை 100 விழுக்காடு வாக்களிக்க ஆவலுடன் காத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் ஏங்கல் நத்தம் மலை கிராம மக்கள்.

  மேலும் படிக்க... இந்திய உணவுக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: