HOME»NEWS»TAMIL-NADU»road accident drunk and drive women fought with police officers in thiruvallur crime video vai
மது போதையில் விபத்து.. பெண் பொறியாளர் போலீசாரிடம் ரகளை... வைரலாகும் வீடியோ காட்சிகள்
திருவள்ளூர் அருகே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் குடி போதையில் ஜீப் ஓட்டி வந்து வேன் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். போதையில் போலீசாருடன் அவர் சண்டையிட்ட வீடியோ காட்சிகள் வைரலாகப் பரவி வருகின்றன. போலீசார் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் 21 வயதான நித்து; இவருக்கு நிகில் பாண்டே என்பவருடன் திருமணமாகி உள்ளது. நித்து, திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் உள்ள ஜேசிபி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்து வந்துள்ளார். பயிற்சி முடிந்ததை முன்னிட்டு, சக நண்பர்களுடன் மணவாளநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் பங்கேற்ற நித்து அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு தனது ஜீப்பை எடுத்துக் கொண்டு அவரே ஓட்டி வந்துள்ளார்.
ஜீப் கிளம்பிய சிறிது தூரத்திலேயே முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். விபத்திற்குள்ளாகிய வேன் ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுத்து சமாதானப்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி துரைபாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
மது போதையில் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறிய நித்து, தன்னைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 2 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் நித்து தொடர்ந்து போதையில் ரகளை செய்து கொண்டிருந்தார்.
அதனால் அந்தப் பெண்ணின் நண்பர்களுக்குத் தகவல் சொல்லி வரவழைத்த போலீசார், அவர்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். நித்து ஓட்டி வந்த ஜீப்பை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதோடு போலீசாரிடமும் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்ணின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.