விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்.கே.ராஜா போலீசாரிடம் சரண்

Youtube Video

இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர் கே ராஜா, போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.

  • Share this:
நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரமான எஸ்ஏ சந்திரசேகர், நவம்பர் முதல் வாரத்தில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகின. கட்சியின் தலைவராக ஆர்கே ராஜா என்ற பத்மநாபன், கட்சியின் பொதுச் செயலாளராக எஸ் ஏ சந்திரசேகர், பொருளாளராக விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

கட்சி பற்றிய செய்தி வெளியாகி சிறிது நேரத்திலேயே தனக்கும் அந்தக் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும், தனது பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது எனவும் நடிகர் விஜய் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். தாய் ஷோபாவும் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். விஜய் விஷ வலையில் சிக்கியிருப்பதாக அவரது தந்தை எஸ்.ஏ.சி பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதேநேரம், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவரான ஆர்கே ராஜா, நடிகர் விஜயின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாக திருச்சி மாவட்ட நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் காவல்துறையில் புகாரளித்தனர்.

இந்த நிலையில்தான், தளபதி விஜய் மக்கள் இயக்க கட்சியின் தலைவரான ஆர் கே ராஜா மீது, விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகியான சுந்தரவடிவேல் திருச்சி மாநகர போலீசாரிடம் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில், 2014ம் ஆண்டு சீட்டு நடத்தி விற்கப்பட்ட மனையைப் பத்திரப் பதிவு செய்து கொடுக்காமல் மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்திருந்தார்.

அந்தப் புகாரின் பேரில் ஆர்கே ராஜா மீது மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்; ஆர் கே ராஜா தலைமறைவானார். அதேநேரம், ராஜாவின் மனைவி, மைத்துனர், மாமனார் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்

இதற்கிடையே, புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏயும் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளருமான புஸ்சி ஆனந்தின் துாண்டுதலின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், தன் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் புஸ்சி ஆனந்த் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டி ஆர் கே ராஜா வீடியோ வெளியிட்டார்

இந்தச் சூழலில் தான், ஆர் கே ராஜா, வியாழக்கிழமை இரவு, திருச்சி மாநகர குற்றப் பிரிவு போலீசாரிடம் ஆர் கே ராஜா சரணடைந்தார். அவரிடம் போலீசார் மனைப் பதிவு புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து விஜய் மக்கள் இயக்கத்தில் ஆர் கே ராஜா தொடர்நது இயங்குவாரா அல்லது ரசிகர் மன்றப் பணியில் இருந்து விலகுவாரா என்பது போகப் போகத் தான் தெரியும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: