தேனியில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் கரையோரப் பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 4,810 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 4168 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 969கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 69 அடியை எட்டியதும் வைகை அணையில் நீர் திறக்கப்படும்.
கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 28,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் 105 அடி கொண்ட அணை, அதன் முழு கொள்ளளவான 103.49 அடியை எட்டியுள்ளது.
இதன் காரணமாக அணையில் இருந்து எப்போதும் வேண்டுமானாலும் உபரி நீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித் துறையினர் அறிவித்துள்ளனர். எனவே பவானி ஆற்றங்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு ஏழாயிரம் கன அடியாக இருந்துவருகிறது. அணையின் நீர் இருப்பு 31.53 டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பெய்த மழையால் கவுண்ட நதியின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. கவுண்ட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தை அறியாத மீனாட்சி புரத்தை சேர்ந்த பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார். அதனை்க கண்ட திரளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து அவரை காப்பாற்றினர். சம்பவ இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் தரைப்பாலத்தை மணல் மூட்டைகள் வைத்து சீர் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.