HOME»NEWS»TAMIL-NADU»rice pulling cheating happened at chennai anb srs

சாதாரண பித்தளை சொம்பை வைத்து ரைஸ் புல்லிங் கலச மோசடி... சினிமாவை மிஞ்சும் கடத்தல் சம்பவம்

தங்களை யாராவது பின் தொடர்ந்து வருகிறார்களா என சுதாரிப்புடன் பணம் கொடுக்க வந்தவர்களை பல இடங்களுக்கு மாற்றி கடத்தல்காரர்கள் அலைக்கழித்து வந்துள்ளனர்.இந்தநிலையில் பட்டாபிராம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு பணம் எடுத்து வந்த நபர்களை வரச்சொல்லி மர்ம நபர்கள் இருவர் வந்துள்ளனர்.

சாதாரண பித்தளை சொம்பை வைத்து ரைஸ் புல்லிங் கலச மோசடி... சினிமாவை மிஞ்சும் கடத்தல் சம்பவம்
ரைஸ் புல்லிங்
  • Share this:

சென்னை சாலிகிராமம் வேலாயுதம் நகரைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண் கடந்த 19-ம் தேதி இரவு தனது கணவர் நியூட்டனை மர்ம நபர்கள் சிலர் கடத்தி விட்டதாக புகார் தெரிவித்தார்.
புகாரில் தனது கணவர் அண்ணாசாலையில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்ததாகவும் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாததால், அதனை மூடி விட்டு தற்போது அவர் திருமுல்லைவாயில் பகுதியில் புராதன பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 19-ம் தேதி காலையில் கடைக்கு சென்ற நபர் மீண்டும் வீடு வந்து சேரவில்லை எனவும் மர்ம நபர்கள் சிலர் தனது கணவரை கடத்தி விட்டு தனது தந்தையிடம் ரூபாய் 30 லட்சம் பணம் கேட்டு போனில் மிரட்டியதாகவும்  அப்புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் காவல் துறையினர் அசோக் நகர் காவல் உதவி ஆணையர் ரூபன் மற்றும் வடபழனி காவல் உதவி ஆணையர் ராஜசேகர் தலைமையிலான தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த கடத்தல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். நியூட்டனின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த அதேவேளையில் கடத்தல் சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் 20-ம் தேதி காலையில் நியூட்டன் மீண்டும் தனது மாமனாருக்கு கால் செய்து ரூபாய் 30 லட்சம் பணத்தை குறிப்பிட்ட பகுதியில் கொடுத்தால்தான் மர்ம நபர்கள் தன்னை விடுவிப்பதாக கூறி இணைப்பைத் துண்டித்து விட்டார். இதை எதிர்பார்த்துக் காத்திருந்த காவல்துறையினர் இரண்டு அணிகளாக பிரிந்து ஒரு அணி பணத்தை கொடுக்க போவதுபோல் இரு சக்கர வாகனத்தில் குறிப்பிட்ட அந்த பகுதிக்கு சென்றும், மற்றொரு அணியினர் போன் கால் வந்த சிக்னலை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

தங்களை யாராவது பின் தொடர்ந்து வருகிறார்களா என சுதாரிப்புடன் பணம் கொடுக்க வந்தவர்களை பல இடங்களுக்கு மாற்றி கடத்தல்காரர்கள் அலைக்கழித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் பட்டாபிராம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு பணம் எடுத்து வந்த நபர்களை வரச்சொல்லி மர்ம நபர்கள் இருவர் வந்துள்ளனர். வந்திருப்பது போலீஸ் என அறிந்த மர்ம நபர்களில் ஒருவர் தப்பியோட மற்றொருவர் மாட்டிக்கொண்டார்.
போலீசார் விசாரணையில் மாட்டிக்கொண்ட நபர் அரக்கோணத்தை சேர்ந்த கௌதம் என்பதும் தப்பி ஓடிய நபர் திருத்தணியை சேர்ந்த சுனில் என்பதும் தெரியவந்தது.



இதனையடுத்து தப்பி ஓடிய சுனில், நியூட்டனின் மாமனாருக்கு கால் செய்து போலீசுக்கு சென்றதால் உங்களது மருமகனை கொலை செய்யப் போகிறோம் என்றும் மேலும் ரூபாய் 30 லட்சத்தை உடனடியாக கொடுத்துவிட்டால் கொலை செய்யாமல் விட்டு விடுவோம் எனக் கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர், திருத்தணியில் உள்ள சுனிலின்  வீட்டிற்கு சென்று அவரது மனைவி மூலம் சுனிலை தொடர்பு கொண்டுள்ளனர்.

காவல்துறையினர் தனது வீடுவரை வந்துவிட்டதை அறிந்து பயந்துபோன சுனில் தான், திருப்பதி அருகே இருப்பதாகவும் தானே காவல் நிலையம் வருவதாகவும் கூறி உள்ளார். அதே நேரம் கடத்தல்காரர்களின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போலீசாருக்கு கடத்தல்காரர்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்று சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த தனிப்படை போலீசார் ஸ்ரீபெரும்புதூர் அருகே கடத்தல்காரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தை மடக்கி பிடித்துள்ளனர்.
நியூட்டன் மற்றும் அவரது நண்பர் ரகுஜி ஆகியோரை மீட்ட போலீசார் கடத்தல்க்காரர்களான வில்லிவாக்கத்தை சேர்ந்த விக்கி மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் பூந்தமல்லியில் பணப்பையை வாங்குவதற்கு காத்திருந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் சுகாதாரதுறை மேலாளராக பணிபுரியும் திலீப்பையும் கைது செய்தனர்.
இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் சினிமாவை மிஞ்சும் மோசடியை நியூட்டன் மற்றும் பெங்களூரை சேர்ந்த அவரது நண்பரான மேத்யூ ஆகியோர் நடத்தி இருப்பதும் அவர்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் நியூட்டன் மற்றும் ரகுஜியை கடத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

பெங்களூரை சேர்ந்த தனது நண்பரான மேத்யூ என்பவருடன் சேர்ந்து நியூட்டன் ரைஸ் புல்லிங் கலசம் இருப்பதாக கூறி சுமார் 21 பேரிடம் 60 லட்ச ரூபாய் பணம் பெற்று அதனை விற்று இருமடங்காக பணம் தருவதாக கூறி ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாதாரண பித்தளை சொம்பை சாயமிட்டு அதனை ரைஸ்புல்லிங் கலசம் எனக்கூறி ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ரைஸ் புல்லிங் கலசம் என நம்பி சாதாரண பித்தளை சொம்பை ரூ.60 லட்சத்துக்கு வாங்கி சென்ற நபர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவர, மோசடி நபர்களான நியூட்டன் மற்றும் மேத்யூவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்தநிலையில் பணம் தராமல் இழுதடிக்கவே, பணம் கொடுத்தவர்கள் அடிக்கடி நியூட்டனிடம் பணம் கேட்டு அவரது வீட்டுக்கே வந்துள்ளனர். கடந்த 19-ம் தேதி மேத்யூ சென்னை வர அவரை சந்திக்க நியூட்டன் ஏற்பாடு செய்த நிலையில் திலீப், சதீஷ்,கவுதம் உள்ளிட்ட 5 பெரும் திருமுல்லை வாயில் சென்றுள்ளனர்.

அங்கு வாக்குவாதம் முற்றவே மேத்யூ நைசாக நழுவிவிட 5 பேரும் நியூட்டனையும் அவரது நண்பர் ரகுஜியையும் காரில் கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்துளளது.
தற்போது திலிப், சதீஷ், கெளதம், சுனில், விக்கி ஆகியோரையும் காவல் நிலையம் அழைத்து வந்த காவல்துறையினர்  மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தல் சம்பவத்துக்கு மூலக்காரணமாக இருந்தது தீலீப் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் கடத்தப்பட்ட நியூட்டன் மற்றும் அவரது நண்பரான ரகுல்ஜி தப்பிச்சென்ற மேத்யூ ஆகிய ஏமாற்றுக்காரர்கள் இதுவரை எத்தனை நபர்களை ஏமாற்றியுள்ளனர்? எந்தெந்த வகைகளில் ஏமாற்றி உள்ளனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடத்தல்காரர்களிடமிருந்து கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கரம் வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Published by:Ram Sankar
First published: