ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சட்டசபையில் ஆளுநர் விவகாரம்.. முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டு - சபாநாயகர் அப்பாவு

சட்டசபையில் ஆளுநர் விவகாரம்.. முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டு - சபாநாயகர் அப்பாவு

அப்பாவு

அப்பாவு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஆளுநர் எதை செய்யலாம் செய்யக்கூடாது என்பதற்கு இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தனது முடிவை பேரவையில் தெரிவித்தார். அப்போது, அரசியலமைப்பு மற்றும் சட்டப்பேரவை விதியின்படி தான் ஆளுநர் உரை நிகழ்த்துகிறார். அவ்வாறு ஆளுநர் உரை நிகழ்த்தும் போது தடுக்கவோ, குறுக்கீடு செய்தால் அது ஊறுவிளைப்பதாக கருதி சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் . இதன்படி பார்க்கும் பொழுது, கடந்த காலங்களில் பேரவையில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது என்றும் , 1988 ஆம் ஆண்டு பாத்தீமா பீவி ஆளுநராக இருந்த போது, எதிர்க்கட்சியினர் பேரவையில் இருக்கையின் மேல் எழுந்து நின்று, வாயில் கருப்புக்கொடி கட்டி குழப்பத்தை ஏற்படுத்தினர் என்று சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 2012 ஆம் ஆண்டு ஆளுநர் சுஜித்சிங் பர்னாலாவிற்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தக்கூடிய வகையில் எதிர்க்கட்சியினர் செயல்பட்டு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். கடந்த ஒன்பதாம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது உள்ளங்களில் இருந்த கருத்தை ஆளுநர் இருந்தபோது அவரின் இருக்கைக்கு முன்பாக வந்து. கோஷங்கள் எழுப்பினர். கடந்த காலங்களில் நடந்தது போன்று அசம்பாவிதம் சம்பவமோ, தர்ணாவோ, இருக்கையில் ஏறி நின்று போராட்டம் போன்ற தவறான நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை. அதன் அடிப்படையில் தான் தன்னுடைய தீர்ப்பு இருப்பதாக அப்பாவு தெரிவித்தார்.

1995 ஆம் ஆண்டு சட்டப்பேரவை விதி 92- 7 யை திருத்தங்கள் செய்தனர். ஆனால் குடியரசு தலைவர், ஆளுநர், நீதியரசர் ஆகியோரின் மாண்பை காக்கும் விதமாக இந்த திருத்தங்கள் எல்லாத்தையும் மாற்றி ஒரு சட்டமாகவே கலைஞர் கொண்டு வந்தார் என பேரவை தலைவர் கடந்த கால நிகழ்வுகளை சுட்டிக்காட்டினார்.

ஆளுநர் உரையின்போது நடைபெற்ற சம்பவம் அனைவருக்கும் தெரியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அமைச்சர்கள் தயார் செய்த உரையை தான் ஆளுநர் வாசிப்பார். அதன்படி தயார் செய்யப்பட்ட உரைக்கு ஆளுநரின் ஒப்புதல் பெற்று அவர் கையொப்பமிட்ட இசைவு பெறப்படும். அவ்வாறு பெறப்பட்ட உரையை தான் ஆளுநருக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு அச்சிடப்பட்டு வழங்கிய உரையில் பல பகுதிகளை விட்டும், சில பகுதிகளை சேர்த்தும் ஆளுநர் உரை நிகழ்த்தினார். உரையில் தெரிவிக்கும் கருத்துகளுக்கு முதலமைச்சர் மற்றும் அரசு தான் பொறுப்பு ஏற்குமே தவிர, ஆளுநரை யாரும் சொல்லமாட்டார்கள், ஆளுநருக்கு உரை வாசிப்பதோடு முடிந்து விடுகிறது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

இந்த அசாதாரண சூழ்நிலையில் முதலமைச்சர் மதிநுட்பத்துடன் முடிவெடுத்து தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனால் சட்டமன்ற மாண்பு காப்பாற்றப்பட்டதாகவும், தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

ஆளுநர் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்பதற்கு இது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆளுநர் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற நிலையில் அதை மாற்றி முதலமைச்சர் கொடியேற்ற நிலையை உருவாக்கியவர் கலைஞர். அதேபோல் இந்தியா முழுமைக்கும் அவையில் ஆளுநர் எந்த நிலையில் இருக்க வேண்டும் என வரையறுத்து காட்டி, அவையின் மாண்பை நிலைநாட்டி உள்ளார் முதல்வர்

ஆளுநர் உரையின் போது இனி இதுபோன்ற சம்பவங்களில் உறுப்பினர்கள் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்த சபாநாயகர், சட்டப்பேரவை விதி 92-7 படி தான் உறுப்பினர்கள், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசவேண்டும் என்று குறிப்பிட்டார்.

First published:

Tags: CM MK Stalin, RN Ravi, TN Assembly