அதிமுகவில் இடைக்கால பொது செயலாளர் பொறுப்பு வரும் 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படவுள்ளது. அதன்படி இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவுபடி அக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால் பொதுசெயலாளர் பதவி உருவாக்குவதற்கான தீர்மானம் இல்லாததால் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் நிரந்தர அவை தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதோடு, மீண்டும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுவுக்கு தடை பெற ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், பொதுக்குழுவுக்கான அழைப்பிதழை தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் அனுப்பி, கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்த இபிஎஸ் தரப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில், பொதுக்குழு கூட்டம் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் காலை 9:15 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு வர வேண்டும் எனவும், கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Must Read : அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கு..
அதிமுக பொதுக்குழுவில் 16 அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன அதன் விவரம் வருமாறு:
1. அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்.
2. தந்தை பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துதல்.
3. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை பதவியை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வுசெய்யும் கழக பெதுச்செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுத்தல்.
4. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது, அதன் மீது விவாதம் நடத்தி முடிவு எடுப்பது.
5. அதிமுக பொதுச்செயலாளரை, நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல்.
6. அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக இந்த பொதுக்குழுவிலேயே முடிவு எடுத்தல்.
7. அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப் பட உள்ளது.
8. எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் செயல்பட்ட அரசின் வெற்றிகள் குறித்து விவாதித்தல்.
9. கடந்த அதிமுக ஆட்சியல் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல்.
10.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல்.
11. சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல்.
12. மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துல்.
13. இலங்கை தமிழர் நலன் காக்க மாத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துதல்.
14. அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்துதல்.
15. நெசவாளர்களின் துயர்துடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துதல்.
16. தேர்தல் வாக்குறுதிகளை நிறுவேற்றாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கழகத்தின் மீது பொய் வழக்குபோடும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல். ஆகிய 16 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அதிமுக தலைமை உத்தரவுவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.