• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

மாநில தேர்தல் ஆணையம்

மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியாகி உள்ளது.

  • Share this:
    அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் நீண்ட நாட்களாக அந்த பதவிகள் காலியாக இருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டன. தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக உருவெடுத்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரை உள்ளிட்ட பல்வேறு பணிகள் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது.

    மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை வரும் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்ற ஆணைப்படி தேர்தலை நடத்துவது குறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் திமுக சார்பில் கிரிராஜன், சுந்தர், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதேபோல் பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கு கருத்துகளை கூறினர். வரும் 15ம் தேதி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவை காலை 7 மணி முதல் மாலைக்கு 6 மணிக்குள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்ததாக திமுக பிரதிநிதி கிரிராஜன் தெரிவித்தார்.

    இந்நிலையில் 9 ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  தென்காசி, ராணிபேட்டை பொது பிரிவு பெண்களுக்கும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி பட்டியல் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: