உக்ரேனில் தங்கியிருந்த தமிழக மாணவர்கள் மொத்தமாக மீட்டு எடுக்கும் பணி நிறைவடைந்தது என நாடாளுமன்ற உறுப்பினர்
திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கியிருந்த தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணிக்காக 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அடங்கிய சிறப்புக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அந்தக் குழு இந்திய வெளியுறவுத் துறையுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் மூலம் 1,890 பேரை மீட்டுள்ளனர்.
இறுதியாக நேற்றிரவு வந்துசேர்ந்த 9 மாணவர்களுடன் தமிழ்நாடு அரசின் சிறப்புக்குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராச்சாமி, எம்.எம். அப்துல்லா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் டெல்லியிலிருந்து இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மாணவர்களுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மருத்துவம் கல்விக்காக தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிந்து வந்தனர். அங்கு நடைபெறும் போரின் காரணமாக அவர்களை மீட்டும் பணி நடைபெற்றது. டெல்லியில் கட்டளை மையம் அமைக்கப்பட்டு அங்கிருந்த மாணவர்களை தொடர்புகொண்டு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி மாணவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு சார்பில் ஈடுபட்டோம்.
ஜம்மு, காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
தமிழக மாணவர்கள் உக்ரைனிலிருந்த போது பல இன்னல்களை அனுபவித்தனர். தூதரக அதிகாரிகள் இந்தியில் மட்டுமே பேசினர் என இந்தியா திரும்பிய மாணவர்கள் குற்றஞ்சாட்டினார். உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு வந்த தென்இந்திய மாணவர்கள் இந்தியா அனுப்புவதற்கு தூதரக அதிகாரிகள் கால தாமதம் ஏற்படுத்தினர். இந்திய அதிகாரிகள் ஆங்கிலத்தில் இல்லாது. இந்தியில் மட்டுமே பேசியுள்ளனர். அதனை சரி செய்ய வெளியுறவு துறையிடம் கோரிக்கை விடுத்தோம்.
உக்ரைன் நாட்டின் அண்டை நாட்டிற்கு சென்று மீட்பதாக திட்டமிடப்பட்டது. இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் அந்த பணியை செய்வதால் அதற்கு அவசியம் இல்லை தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறியது. பின்னர் தமிழக அரசின் குழு டெல்லியிலிருந்தே ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டது. அதன் பிறகுதான் அதிக அளவிலான தமிழக மாணவர்கள் உக்ரைனிலிருந்து இந்தியா திரும்பினர். டெல்லியிலிருந்து சென்னை திரும்ப தமிழக அரசு சார்பில் தனி விமானம் மூலமாக அவர்களை மீட்டு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இறுதியாக 9 தமிழக மாணவர்கள் போர் நடந்து வந்த சுமி பகுதியில் சிக்கியதால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த மாணவர்களை மீட்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அவ்வப்போது எங்களுடன் ஆலோசித்து வந்தார்.
வெளியுறவுத்துறை அதிகாரிகளோடு பேசி சுமி பகுதியிலிருந்து மாணவர்களை வெளிற்ற்றுவதற்கான பேருந்து செலவு மற்றும் அடிப்படை வசதிகளுக்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்று 9 மாணவர்களையும் இந்தியா வரவைத்து இன்று சென்னையில் முதலமைச்சரே மாணவர்களை வரவேற்றார்.
உக்ரேனில் தங்கியிருந்த தமிழக மாணவர்கள் மொத்தமாக மீட்டு எடுக்கும் பணி நிறைவடைந்தது mission is accomplished என கூறினார். மேலும், 31 மாணவர்கள் கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அங்கு அவர்கள் பதுகாப்பாக இருந்து கொள்கிறோம் என கூறிவிட்டனர் என்று திருச்சி சிவா கூறினார்.
அதனை தொடர்ந்து பேட்டியளித்த மாணவர்கள், உக்ரைனில் போர் பகுதியில் பல இன்னல்களை அனுபவித்து இந்தியா திரும்பினோம் என்றும். எங்களை பத்திரமாக மீட்க தமிழக அரசும், முதலமைச்சரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து எங்களை மீட்க உதவியதற்கு நன்றி தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.