உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்ஷன் நகரில் சிக்கியுள்ள தங்களை மீட்க வேண்டும் என கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த மாணவர் ஆரோக்கிய செபஸ்டியன் தமிழக முதல்வருக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். குறைவான எண்ணிக்கையில் உள்ள மாணவர்களை மீட்க தூதரகம் கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஆரோக்கிய செபஸ்டியன். இவர் உக்ரைன் நாட்டில் உள்ள கெர்சன் நகரில் படித்து வருகின்றார். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கெர்ஷன் நகரை ரஷ்யநாட்டு ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள மாணவர்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஆரோக்கிய செபஸ்டியன் வெளியிட்டுள்ள வீடியோவில், தாங்கள் இருக்கும் கெர்ஷன் நகரில் சாப்பாடு உட்பட அடிப்படை தேவைகளுக்கு பிரச்சனை இருப்பதாகவும், தனிப்பட்ட முறையில் பலர் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டே இருந்தாலும் தங்களை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா கைப்பற்றியுள்ள கெர்ஷன் பகுதியில் தன்னை சேர்த்து 5 இந்தியர்கள் சிக்கி இருப்பதாகவும், மாஸ்கோ தூதரகத்தை தொடர்பு கொண்டால் உக்ரைன் தூதரகத்தை தொடர்பு கொள்ள சொல்வதாகவும், நிறைய பணம் கொடுக்க முன்வந்தாலும் இங்கிருந்து ருமேனியா எல்லைக்கோ அல்லது அருகில் உள்ள நகரங்களுக்கோ அழைத்துச் செல்ல யாரும் முன்வரவில்லை எனவும் மாணவர் ஆரோக்கிய செபஸ்டியன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Must Read : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டும் என கணிப்பு
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இந்த நகரம் இருப்பதால் யாரும் வெளியில் இருந்து உள்ளேயும், இங்கிருந்து வெளியேவும் செல்லவில்லை எனவும், என்ன செய்வது என தெரியாமல் முடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நிறைய மாணவர்கள் இருக்கும் கார்கிவ், சிமி போன்ற பகுதியில் இருப்பவர்களை மீட்பதில் மட்டும் கவனம் செலுத்தும் தூதரக அதிகாரிகள் தங்களை போல குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்களை மீட்பதில் கவனம் செலுத்துவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Read More : வேலை வாய்ப்புக்கு உதவும் ‘பாலம்’ திட்டம் - கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்
தங்களை மீட்க தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிருஷ்ணகிரி மாணவர் ஆரோக்கிய செபஸ்டியன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin, Russia - Ukraine, Tamil student