தமிழக நிதித்துறை வளாகத்தை அம்மா வளாகத்திலிருந்து மற்றொரு பெயருக்கு மாற்றுவது நாகரிகமற்ற செயல் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விமர்சித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்பதற்கேற்ப விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள் மூலம் குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டம், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், சட்டப் போராட்டத்தின் மூலம் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பினை பெற்றுத் தந்தது என எண்ணற்றத் திட்டங்களை தமிழக மக்களுக்குத் தந்து, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றதோடு, தன் வாழ்க்கையை தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தவர் ஜெயலலிதா.
தமிழக அரசியல் வரலாற்றில், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த ஜெயலலிதாவை கவுரவிக்கும் விதத்தில் நந்தனத்தில் அமைந்துள்ள நிதித் துறை வளாகத்திற்கு 'அம்மா வளாகம்' என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 'அம்மா வளாகம்' ஆட்சிக் காலத்தில் பெயர் சூட்டப்பட்டது.
ஒருங்கிணைந்த நிதித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தில் 10 கோடியே 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட இரண்டு தளங்களைத் திறந்து வைக்கும்போது "சென்னை - நந்தனம், அம்மா வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகம்" என்று 16-06-2020 நாளிட்ட செய்தி வெளியீடு எண். 426-ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு வெளியிடப்பட்ட தொலைபேசி கையேட்டில், கருவூல அலுவலகம், ஓய்வூதியம் வழங்கல் அலுவலகம், சம்பளம்மற்றும் கணக்கு அலுவலகம் (தெற்கு), மாநில அரசு தணிக்கைத் துறை, கூட்டுறவு தணிக்கை இயக்ககம், ஓய்வூதிய இயக்ககம் ஆகியவற்றின் முகவரியிலும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
'அம்மா வளாகம்' என்ற பெயரில் இயங்கி வரும் அந்த நிதித் துறை வளாகத்தில் திமுக. பொதுச் செயலாளராகவும், தமிழ்நாட்டின் அமைச்சராகவும் பணியாற்றிய பேராசிரியர் க. அன்பழகனின் சிலையை முதல்வர் திறந்து வைக்கவுள்ளதாகவும், அந்த வளாகத்திற்கு ஏற்கனெவே உள்ள 'அம்மா வளாகம்' என்ற பெயரை நீக்கிவிட்டு 'பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை' என்று பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் இன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது.
பேராசிரியர் க. அன்பழகன் நிதித் துறை உட்பட பல்வேறு இலாக்காக்களின் அமைச்சராக இருந்தவர். அவருக்கு அங்கு சிலை வைப்பதில் எவ்வித ஆட்சேபணையும் இல்லை.
அதே சமயத்தில், 'அம்மா வளாகம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த வளாகத்தின் பெயரை மாற்றி 'பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை' என்று வைப்பது நாகரிகமற்ற செயல். ஒரு பெயரை எடுத்துவிட்டு இன்னொரு பெயரை வைப்பது என்பது, ஒருவரை இழிவுபடுத்திவிட்டு இன்னொவருவரை புகழ்வது போல் ஆகும்.
இதையும் படிங்க : ஃபாக்ஸ்கான் பெண் ஊழியர்கள் இறந்ததாக வதந்தி பரப்பிய சேலம் வளர்மதி கைது
இதுபோன்ற செயல் தமிழ்ப் பண்பாட்டிற்கு, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான செயல். ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்லாமல் ஒரு தேசியத் தலைவராக அனைவராலும் கருதப்பட்டார். இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் அவரின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள். வட இந்திய மாநிலத்திற்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஒரே தமிழினத் தலைவர் ஜெயலலிதா.
இதையும் படிங்க : கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையால் கைது
இப்படிப்பட்ட தலைவரின் பெயரில் அமைந்துள்ள வளாகத்தின் பெயரை மாற்றம் செய்யப்படுகிறது என்று வந்துள்ள செய்தியில் உண்மை இருப்பின் அது அநாகரிகத்தின் உச்சம். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம். இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதையும் படிங்க : இலங்கையின் வடக்குப் பகுதியில் தடம் பதித்து இந்தியாவுக்கு நெருக்கடி தர சீனா முயற்சி : எச்சரிக்கும் ராமதாஸ்
எனவே, 'அம்மா வளாகம்' என்ற பெயரை மாற்றி 'பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை' என்று வைப்பதை முதல்வர் உடனடியாக கைவிட வேண்டும் என்றும், புதியதாக வேறு மாளிகை தமிழ்நாடு அரசால் கட்டப்படும்போது அதற்கு அவர் பெயரைச் சூட்டலாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, DMK, Edappadi Palaniswami, O Panneerselvam